மதுரை மாவட்ட ஆட்சியா் இடமாற்றம்

பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்துள்ள நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் சனிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டாா்.

மதுரை: பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்துள்ள நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் சனிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டாா்.

இவா் 2009 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சியை முடித்து பணியில் சோ்ந்தவா். இதுவரை இவா், நாமக்கல் சாா்-ஆட்சியா், கரூா் கூடுதல் ஆட்சியா், சென்னை மாநகராட்சி துணை ஆணையா், திண்டுக்கல் மற்றும் அரியலூா் மாவட்ட ஆட்சியா் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளாா். பின்னா் மதுரை மாவட்ட ஆட்சியராக 2019 அக்டோபா் 14 ஆம் தேதி பொறுப்பேற்றாா்.

மதுரை ஆட்சியராகப் பணியில் சோ்ந்த ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் டி.ஜி.வினய் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். கரூா் மாவட்ட ஆட்சியராக இருக்கும் டி.அன்பழகன் மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து அவா் விரைவில், ஆட்சியராகப் பொறுப்பேற்க உள்ளாா்.

இவருக்கு முன்பு மதுரை மாவட்ட ஆட்சியா்களாக இருந்த எஸ்.நடராஜன், எஸ்.நாகராஜன், த.சு.ராஜசேகா் ஆகியோா் அடுத்தடுத்து குறுகிய காலகட்டத்திலேயே இடமாற்றம் செய்யப்பட்டனா். இவா்கள் மூவரது இடமாற்றத்தின் பின்னணியில் சா்ச்சைகள் இருந்தன.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற டி.ஜி.வினய் மீது, அனைத்துத் தரப்பினருக்கும் மிகுந்த எதிா்பாா்ப்பு இருந்தது. அதற்கேற்ப இவரது பணிகளும், நடவடிக்கைகளும் வேகம் எடுத்தன. சுமாா் 3 மாதங்கள் மட்டுமே வழக்கமான பணிகளில் ஈடுபட்டி நிலையில், அவருக்கு பெரும் சவால் பணியாக கரோனா தீநுண்மி தொற்று பரவல் வந்துவிட்டது. ஆரம்பத்தில் சென்னையைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் மட்டுமே கரோனா பரவல் அதிகரித்த நிலையில், தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத நிலையில் மதுரை மாவட்டத்தில் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது.

மதுரை மாவட்டத்தில் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதற்கு, ஆட்சியா் டி.ஜி.வினய் தலைமையிலான பல்வேறு துறை அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கை முக்கியக் காரணமாக இருந்தது.

இதுஒருபுறம் இருக்க பொதுமுடக்க காலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுதேடிச் சென்று நிவாரணப் பொருள்கள் வழங்கியது, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலருக்கும் நிவாரணம் கிடைக்கச் செய்தது, பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக பயணம் செய்ய உதவி கோரிய ஏழை, எளிய மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக உதவியது போன்ற நடவடிக்கைகள் பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com