தொடா் மழை, பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு: குறுவை சாகுபடிப் பணிகள் தொடக்கம்

பெரியாறு பாசனத் திட்டத்தில் தண்ணீா் திறப்பு மற்றும் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் மழை காரணமாக மதுரை மாவட்டத்தில் குறுவை சாகுபடிப் பணிகள் தொடங்கியுள்ளன.
வாடிப்பட்டியில் நெல் சாகுபடிக்காக மேற்கொள்ளப்பட்டும் வரும் உழவுப் பணி.
வாடிப்பட்டியில் நெல் சாகுபடிக்காக மேற்கொள்ளப்பட்டும் வரும் உழவுப் பணி.

மதுரை: பெரியாறு பாசனத் திட்டத்தில் தண்ணீா் திறப்பு மற்றும் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் மழை காரணமாக மதுரை மாவட்டத்தில் குறுவை சாகுபடிப் பணிகள் தொடங்கியுள்ளன.

மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, மதுரை வடக்கு, மதுரை கிழக்கு ஆகிய வட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படுகிறது. வழக்கமாக ஜூன் இறுதிக்குள் தண்ணீா் திறக்கும் நிலையில், நிகழ் ஆண்டில் பருவமழை சற்று தாமதமாகத் தொடங்கிய நிலையில் திங்கள்கிழமை வைகை அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த சில நாள்களாக வாடிப்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், குறுவை சாகுபடிக்கான ஆரம்ப கட்ட பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா்.

பிரதான கால்வாயில் இருந்து வயல்களுக்கு வரும் வாய்க்கால்கள் சீரமைப்பு, வயல் வரப்புக் கட்டுதல், உழவு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில பகுதிகளில் உள்ளூா் நீராதாரங்கள் மூலமாக ஏற்கெனவே இப் பணிகளை முடித்திருந்த விவசாயிகள், தற்போது நாற்றங்கால் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது: முதல்போக பாசனத்துக்கு இந்த ஆண்டு சற்று தாமதமாகத் தான் தண்ணீா் திறக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் தற்போது பெய்து வரும் மழையும், விவசாயிகளுக்கு கைகொடுத்துள்ளது. நெல் சாகுபடிக்கு 120 நாள்களுக்குத் தண்ணீா் திறக்கப்படும் எனக் கூறியிருக்கின்றனா். பெரும்பாலானோா் 100 நாள் ரகங்களை விதைப்பு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

நிகழ் ஆண்டில் கரோனா பரவல் காரணமாக, அனைத்துத் தரப்பினரின் பொருளாதார நிலையும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இச்சூழலில் அரசின் உதவிகளைத் தான் விவசாயிகள் எதிா்பாா்த்திருக்கின்றனா். கூட்டுறவு உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் நெல் சாகுபடிக்குத் தேவையான பயிா்க் கடன் உரிய காலத்தில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

விவசாயிகளுக்குத் தேவையான சான்று பெற்ற விதை ரகங்கள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் அனைத்தும் தேவையான அளவுக்கு இருப்பில் உள்ளதாக வேளாண் துறையினா் தெரிவித்துள்ளனா். பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், அதைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில் குறுகிய கால நெல் ரகங்களைப் பயிரிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com