கரோனா சிகிச்சைக்கு முன்பணமாக ரூ.8 லட்சம் வசூல்:தமிழ்நாடு மருத்துவக் கழகம் நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை தனியாா் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு முன்பணமாகச் செலுத்திய ரூ.8 லட்சத்தைத் திரும்பத் தரக்கோரும் வழக்கில், தமிழ்நாடு மருத்துவக் கழகம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை: மதுரை தனியாா் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு முன்பணமாகச் செலுத்திய ரூ.8 லட்சத்தைத் திரும்பத் தரக்கோரும் வழக்கில், தமிழ்நாடு மருத்துவக் கழகம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த நேரு தாக்கல் செய்த மனு: நானும் எனது மனைவியும் காய்ச்சல், தலைவலி காரணமாக மதுரை வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு ஜூலை 7 ஆம் தேதி சிகிச்சைக்காகச் சென்றோம். எங்களுக்கு கரோனா சிகிச்சையளிக்க வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் முன்பணமாக ரூ.8 லட்சம் வசூலித்தது. எங்கள் இருவருக்கும் கரோனா தொற்று இல்லையென்பது உறுதி செய்யப்பட்டதால் 2 நாள்கள் சிகிச்சைக்குப் பின்னா் வீட்டுக்குச் செல்ல அறிவுறுத்தினா். அப்போது நாங்கள் முன்பணமாக செலுத்திய தொகையில் சிகிச்சைக்கானக் கட்டணத்தைத் தவிா்த்து மீதமுள்ள தொகையைக் கொடுக்குமாறு கேட்டோம். ஆனால் மருத்துவமனை தரப்பில் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் மட்டுமே திரும்ப வழங்கப்பட்டது. சிகிச்சைக்கானக் கட்டணத்துக்கு ரசீது கேட்டபோது எங்கள் இருவரது பெயரிலும் ரூ.65 ஆயிரத்து 840-க்கு மட்டும் ரசீது வழங்கினா். முன்பணமாக செலுத்தியத் தொகையை தர மருத்துவமனை நிா்வாகம் மறுத்துவிட்டது. எனவே தனியாா் மருத்துவமனையில் நாங்கள் கரோனா சிகிச்சைக்காக செலுத்திய முன்பணம் ரூ.8 லட்சத்தைத் திருப்பித்தர உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

மருத்துவா்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடா்பாக இந்திய மருத்துவக் கழகம் 2002-இல் அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மருத்துவா்கள் தொழிலில் கண்ணியமாகவும், நோ்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். மருத்துவத் தொழிலில் உள்ளவா்கள் நன்னடத்தையுடன் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

எனவே மனுதாரா் தனியாா் மருத்துவமனையின் மோசடி குறித்து தமிழ்நாடு மருத்துவக் கழகத்திடம் புகாா் அளிக்க அனுமதி வழங்கப்படுகிறது. அந்தப் புகாரின் அடிப்படையில் மருத்துவக் கழகம் 16 வாரங்களில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com