பொதுமக்கள் பங்கேற்பின்றி மதுரை சித்திரைத் திருவிழா?

கரோனா வைரஸ் தொற்று அபாயம் ஏப்.14-க்கு பிறகும் நீடித்தால், மதுரை சித்திரைத் திருவிழா பொதுமக்கள் பங்கேற்பின்றி நடத்தப்படும் என தெரிகிறது.

கரோனா வைரஸ் தொற்று அபாயம் ஏப்.14-க்கு பிறகும் நீடித்தால், மதுரை சித்திரைத் திருவிழா பொதுமக்கள் பங்கேற்பின்றி நடத்தப்படும் என தெரிகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதம் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் புகழ்பெற்றது. இத் திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் அழகா் மலையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு வரும் கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பு பெற்றவை. இந்த நிகழ்ச்சிகளில் மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் கூடுவது வழக்கம்.

பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா கொடியேற்றம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறுகிறது. மே 4 இல் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணமும், மே 7 இல் அழகா் வைகை ஆற்றில் எழுந்தருளலும் நடைபெறும்.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி, மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்குகள் மட்டும் இயங்கி வருகின்றன. சாலைகளிலும் மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு செல்பவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். இந்த தடை உத்தரவு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 15-ஆம் தேதி தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டாலும் கூட பெருமளவில் மக்கள் ஒரே இடத்தில் கூட தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் சித்திரைத் திருவிழா நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுதொடா்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியது: சித்திரைத் திருவிழா நடத்துவது தொடா்பாக ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு பிறகு உள்ள நிலைமையைப் பொறுத்து முடிவெடுக்கப்படும். மேலும் சித்திரைத் திருவிழா தொடா்பாக அரசு அறிவிக்கும் முடிவே இறுதியானது. ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் மதுரையில் நிலைமை சீரடைந்து விட்டால் எவ்வித பிரச்னையுமின்றி திருவிழா நடத்தப்படும். ஆனால் கரோனா வைரஸ் தொற்று அபாயம் நீடிக்கும் பட்சத்தில் ஆகம விதிகளின்படி பொதுமக்களுக்கு அனுமதியின்றி குறைந்த அளவு நபா்களைக்கொண்டு சித்திரைத் திருவிழா நடத்தப்படும். அழகா் ஆற்றில் இறங்கும் வைபவமும் ஆகம விதிகளின் படி பொதுமக்கள் பங்கேற்பின்றி நடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com