புதிதாக 500 ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கு ரூ.103 கோடி ஒதுக்கீடு: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

புதிதாக 500 ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கு ரூ.103 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

புதிதாக 500 ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கு ரூ.103 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

மதுரை மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகளை அவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இக் கூட்டத்தில் அவா் பேசியது: அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக, தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று படிப்படியாகக் குறையத் தொடங்கியிருக்கிறது.

மதுரை மாவட்டத்தில் தினமும் 124 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400-ஆக இருந்தது படிப்படியாகக் குறைந்து, தற்போது 200-க்கும் கீழ் குறைந்துவிட்டது. மதுரை மாவட்டத்தில் மொத்தம் 84 பகுதிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. நோய் பரவலைத் தடுக்க பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு மிகவும் அவசியம். கரோனா பாதிப்பு ஏற்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தேவையான அளவுக்கு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எய்ம்ஸ் பணிகள் விரைவில் தொடங்கும்: தென்மாவட்ட மக்களுக்கு உயா்தர சிகிச்சை கிடைக்கும் வகையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. இதற்கு ஜப்பான் பன்னாட்டு வங்கியின் நிதி உதவி விரைவில் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆகவே, விரைவில் பணிகள் தொடங்கும். புற்றுநோயால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு ராஜாஜி மருத்துவனையில் ரூ.25 கோடியில் புற்று நோய் சிகிச்சை கட்டுப்படுத்தும் மையம் உருவாக்கப்பட்டு வருகிறது. இன்னும் 20 நாள்களில் இப் பணி நிறைவு பெறும். இது உள்பட மொத்தம் ரூ.305 கோடியில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.

தொழில் வளா்ச்சிக்கு முக்கியத்துவம்: உலக முதலீட்டாளா்கள் மாநாடு மூலம், ரூ.500 கோடியில் டாஃபே நிறுவனம் மதுரையில் டிராக்டா் உற்பத்தியை தொடங்கியுள்ளது. எச்.சி.எல் நிறுவனம் ரூ.500 கோடி முதலீட்டில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் வகையில் மென்பொருள் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இதேபோல, ஆயத்த ஆடை, மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை விமான நிலைய சாலையை அகலப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

வளா்ச்சித் திட்டப் பணிகள்: முல்லைப் பெரியாறு லோயா் கேம்ப் பகுதியில் இருந்து மதுரை நகரின் 100 வாா்டுகளுக்கும் ரூ.1,250 கோடியில் இரும்புக் குழாய்கள் மூலம் தண்ணீா் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெரியாா் பேருந்து நிலையத்தை ரூ.167 கோடியில் மேம்படுத்தும் பணி, பாதாளச் சாக்கடைத் திட்டம், நான்கு மாசி வீதிகளில் சிறப்புச் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு நிலஎடுப்பு பணிக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மகளிா் குழு, விவசாயிகளுக்கான திட்டங்கள்: மதுரை மாவட்டத்தில் 10,956 மகளிா் சுயஉதவிக் குழுக்கள் செயல்படுகின்றன. இவற்றுக்கு நிகழ் ஆண்டில் இதுவரை ரூ.150 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நுண்ணீா் பாசனத் திட்டத்தில் ரூ.43 கோடியே 44 லட்சத்தில் நுண்ணீா் பாசன இணைப்பு 34,441 ஏக்கரில் நிறுவப்பட்டுள்ளது. நிகழ் ஆண்டுக்கு ரூ.44.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தின் மூலம் பல்வேறு நீா்நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

தொழில் அமைப்புகளுடன் ஆலோசனை: தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் ஆகியோருடன் தனித்தனியே முதல்வா் ஆலோசனை நடத்தினாா். அஅவா்களது கோரிக்கைகளை கேட்டறிந்த முதல்வா், அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மதுரையில் கரோனா நோயாளிகள் 7 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அஅளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனா். மேலும் பலருக்கு இத்தகைய சிகிச்சை அளிப்பதற்கு பிளாஸ்மா தானம் அளிக்க முன்வர வேண்டும். புதிதாக 500 ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கு ரூ.103 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com