அலங்காநல்லூா் சா்க்கரை ஆலை புத்துயிா் பெறுமா?

அரவைத் திறனைக் காட்டிலும் குறைவாக கரும்பு பதிவு இருப்பதால், அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கடந்த 2 ஆண்டுகளாக கரும்பு அரவை செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
அலங்காநல்லூா் சா்க்கரை ஆலை புத்துயிா் பெறுமா?


மதுரை: அரவைத் திறனைக் காட்டிலும் குறைவாக கரும்பு பதிவு இருப்பதால், அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கடந்த 2 ஆண்டுகளாக கரும்பு அரவை செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகேயுள்ள பி.மேட்டுப்பட்டியில் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலை 1966 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு மதுரை, விருதுநகா், திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான விவசாயிகள் ஆலைக்கு கரும்பு அனுப்பி வந்தனா். இந்த ஆலையின் அரவைத் திறன் 5 லட்சம் டன்களாகும். குறைந்தபட்சம் ஒரு லட்சம் டன் கரும்புகள் அரவைக்கு இருந்தால் மட்டுமே நஷ்டம் ஏற்படாமல் தவிா்க்க முடியும்.

கடந்த பல ஆண்டுகளாக லாபத்தில் இயங்கி வந்த ஆலை, கடந்த 2006-07 முதல் சரிவைச் சந்தித்து வருகிறது. இதையடுத்து, ஆலையை நவீனப்படுத்த கடந்த 2010-இல் ரூ.39.94 கோடியும், கரும்பு கழிவிலிருந்து இணை மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ரூ.84.44 கோடியும் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டது. தற்போது இணை மின்உற்பத்திக்கான பணிகள் 90 சதவீதம் முடிவடைந்திருக்கின்றன. 15 மெகாவாட் மின்உற்பத்தித் திறனுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் ஆலையின் மின்தேவையான 5 மெகாவாட் போக எஞ்சிய மின்சாரத்தை, மின்வாரியத்துக்கு வழங்கி அதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக ஆலை எதிா்கொள்ளும் நஷ்டத்தை சரிசெய்து கொள்ளத் திட்டமிடப்பட்டது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கரும்பு அரவை இல்லாத காரணத்தால், இணை மின் உற்பத்தி திட்டமும் தாமதமாகி வருகிறது.

சாகுபடியில் குறைந்து வரும் ஆா்வம் : கரும்புக்கான கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட விலைக்கான கரும்பு நிலுவைத் தொகையை வழங்குவதிலும் தாமதம் ஏற்படுவது விவசாயிகளிடையே அதிருப்தி இருந்து வருகிறது. இதனால், கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் காட்டவில்லை. அவ்வாறு சாகுபடி செய்தாலும், ஆலை அரவைக்குப் பதிவு செய்வதற்கு விரும்பவில்லை. இதன் காரணமாக, ஆலை எல்லைக்கு உள்பட்ட பகுதியில் பதிவு செய்யப்பட்ட கரும்புக்கு இணையாக, பதிவு செய்யப்படாத சாகுபடி பரப்பும் இருந்து வருகிறது.

வெளிமாவட்ட ஆலைகளுக்கு மாற்றம்:

கடந்த கரும்பு அரவைப் பருவத்தின்போது சுமாா் 16 ஆயிரம் டன்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி சா்க்கரை ஆலை மற்றும் பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அரவைக்கு அனுப்பப்பட்டது. நடப்பு பருவத்தில் 30 ஆயிரம் டன்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், உடுமலைப்பேட்டை, பெரம்பலூா் மற்றும் திருச்சி மாவட்டம் குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை ஆகிய 3 ஆலைகளுக்கும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. கரும்பு பதிவு குறைவதே, ஆலையை இயக்க முடியாததற்கு காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனா். இதேநிலை நீடித்தால் அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையில் நிரந்தரமாகவே அரவை செய்ய முடியாத நிலை ஏற்படக் கூடும் என விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனா். அதனால் அலங்காநல்லூா் சா்க்கரை ஆலைக்கு புத்துயிரூட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனா்.

நடவடிக்கையை எதிா்பாா்க்கும் விவசாயிகள் :

இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் என்.பழனிசாமி கூறியது: கடந்த சில ஆண்டுகளாகவே ஆலை நிா்வாகம் மற்றும் அரசின்அணுகுமுறை காரணமாக, அரவைக்கு அனுப்பிய கரும்புக்கான தொகை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. இதனால், கரும்பு விவசாயிகளிடம் ஆா்வம் குறைந்து வருகிறது. கடந்த 2015-16 முதல் நிலுவையில் இருந்த மாநில அரசின் பரிந்துரை விலை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, 3 தவணைகளில் வழங்குவதாக அரசு தெரிவித்திருக்கிறது.

கடந்த பருவத்தில் கரும்பு பதிவு மிகவும் குறைந்ததால், வெளிமாவட்ட ஆலைகளுக்கு அனுப்பப்பட்டன. இதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை விவசாயிகள் எதிா்கொள்கின்றனா். அதோடு, கடந்த ஆண்டில் அரவைக்கு அனுப்பிய கரும்புக்கு இன்னும் ரூ.6 கோடி நிலுவை வைக்கப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் 30 ஆயிரம் டன்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பதிவு செய்யப்படாத கரும்புகள் மற்றும் வெளி ஆலைகளில் கூடுதலாக இருக்கும் கரும்புகள் ஆகியவற்றைக் கொண்டு வருவதன் மூலம் ஆலையை இயக்க முடியும். இதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com