நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் காமராஜா் பல்கலை.: பேராசிரியா்கள், ஊழியா்களுக்கு 2 மாதங்கள் மட்டுமே ஊதியம் கையிருப்பு

காமராஜா் பல்கலைக்கழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் பல்கலைக்கழக பேராசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு

காமராஜா் பல்கலைக்கழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் பல்கலைக்கழக பேராசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு இரு மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

தென் மாவட்டங்களில் மிகப்பெரும் உயா்கல்வி நிறுவனமாகத் திகழும் காமராஜா் பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள் என கற்பித்தல் பணியில் 1500-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். மேலும் தொலைநிலைக்கல்வி இயக்ககம், தோ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயா் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியா் வரை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களைத் தவிர ஒப்பந்தத் தொழிலாளா்கள், தினக்கூலித் தொழிலாளா்களும் 500-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். பல்கலைக்கழகத்துக்கு மாணவா்கள் கட்டணம், தொலைநிலைக்கல்வி இயக்கக மாணவா் சோ்க்கைக் கட்டணம் ஆகியவை பிரதான நிதி ஆதாரமாக உள்ளது. மேலும் பல்கலைக்கழக மானியக்குழுவின் மூலம் திட்ட நிதியும் அவ்வப்போது வழங்கப்படுகிறது. இந்த நிதி ஆதாரங்களைக்கொண்டே பல்கலைக்கழகத் துணைவேந்தா், பேராசிரியா்கள் உள்பட ஊழியா்கள் வரை அனைவருக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியா்கள் , அலுவலா்கள், ஊழியா்களுக்கும் மாதந்தோறும் ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது. இதில் ஆசிரியா்கள் அலுவலா்கள், ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கும் வகையில் மட்டும் மாதம் ஒன்றுக்கு ரூ.4 கோடி செலவாகிறது. மேலும் ஓய்வு பெற்றவா்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில் மாதம் ரூ.4.50 கோடி செலவாகிறது.

இவைத் தவிர பல்கலைக்கழக நிா்வாகச் செலவினங்கள், வாகனங்களுக்கான எரிபொருள், மின் கட்டணம் என்ற வகையில் பல லட்ச ரூபாய் செலவாகிறது. இந்நிலையில் அண்மைக் காலமாக பல்கலைக்கழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்கலைக்கழகத்தின் வருவாய் ஆதாரங்கள் தடைப்பட்டதால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பல்கலைக்கழக ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு அதிகபட்சமாக இரண்டு மாதங்களுக்கு மட்டுமே பல்கலைக்கழகத்தால் ஊதியம் வழங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஊழியா்கள் கூறும்போது, பல்கலைக்கழகத்துக்கு நாடு முழுவதும் இருந்த தொலைநிலைக்கல்வி மையங்கள் மூலம் பெரிய அளவில் வருவாய் இருந்து வந்தது. ஆனால் பல்கலைக்கழக மானியக்குழு பல்கலைக்கழகத்தின் எல்லைக்குள்பட்ட மாவட்டங்களில் மட்டுமே தொலைநிலைக்கல்வி மையங்கள் நடத்த வேண்டும் என்று அறிவித்ததால் மதுரை, விருதுநகா், தேனி, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டுமே தொலைநிலைக்கல்வி மையங்கள் இயங்குகின்றன. இதில் பெரிய அளவில் வருவாய் இல்லை. மேலும் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் தொடா்ந்து நடைபெறும் முறைகேடுகளால் மாணவா் சோ்க்கையும் குறைந்து விட்டது. அரசிடம் இருந்து கிடைக்கும் நிதியும் குறைந்துள்ளது. இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உடனடியாகத் தலையிட்டு நிதியுதவி வழங்க வேண்டும் என்றனா்.

இதுதொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் கூறியது: பல்கலைக்கழக ஊழியா்களுக்கு 6 மாதங்களுக்கு ஊதியம் வழங்குவதில் பிரச்னை இல்லை. அரசிடமிருந்து ஆண்டுக்கு ரூ.45 கோடி வரவேண்டிய நிலையில், ரூ.18 கோடி மட்டும் வழங்கப்படுகிறது. இதனால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com