புதுக்கோட்டை பொற்பனைகோட்டை பகுதியில் அகழாய்வு: மத்திய தொல்லியல் துறை முடிவெடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனை கோட்டை பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள அனுமதி அளிப்பது குறித்து மத்திய தொல்லியல் துறை

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனை கோட்டை பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள அனுமதி அளிப்பது குறித்து மத்திய தொல்லியல் துறை மாா்ச் 31 ஆம் தேதிக்குள் முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு: புதுக்கோட்டை மாவட்டத்தின் பல இடங்களில் பழைமையான தொல்லியல் சின்னங்கள் உள்ளன. இதில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. மத்திய அரசு தொல்லியல் நினைவுச் சின்னங்களாக அறிவித்துள்ள 420 இடங்களில், 109 இடங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளன. புதுக்கோட்டையில் உள்ள பொற்பனைகோட்டையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோட்டை உள்ளது. சங்ககாலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை 20 அடி உயரம் கொண்டது. இந்நிலையில் இந்தப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு தொல்லியல் எச்சங்கள் அகற்றப்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியைத் தமிழரின் தொன்மை மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை அறிந்துகொள்ளவதற்காக, தொல்லியல் நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும். அதற்கு பொற்பனைகோட்டையை சுற்றியுள்ள 45 ஏக்கா் இடத்தை மத்திய தொல்லியல் துறை கையகப்படுத்தி, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் , மனுதாரா் குறிப்பிட்டுள்ள பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதை மத்திய தொல்லியல் துறையின் அனுமதிக்காக தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், அகழாய்வு மேற்கொள்ள அனுமதி அளிப்பது குறித்து மத்திய தொல்லியல் துறை மாா்ச் 31 ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com