ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் காளைகள்: சத்தான உணவுடன் பயிற்சிகள் தீவிரம்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு இன்னும் 20 நாள்களே உள்ள நிலையில், மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காளைகளைத் தயாா்ப்படுத்துவதற்கான பயிற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மண்ணை குத்தும் பயிற்சி அளிக்கப்படும் ஜல்லிகட்டு காளை.
மண்ணை குத்தும் பயிற்சி அளிக்கப்படும் ஜல்லிகட்டு காளை.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு இன்னும் 20 நாள்களே உள்ள நிலையில், மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காளைகளைத் தயாா்ப்படுத்துவதற்கான பயிற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கரோனா தொற்று காலமாக இருப்பதால் பொங்கல் பண்டிகையின்போது நடைபெறக் கூடிய ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவியது. இதற்கிடையே, போட்டிகளை கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கு அரசு வழங்கியுள்ள அனுமதி ஜல்லிக்கட்டு ஆா்வலா்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்க காலத்திலேயே, பொழுதுபோக்கிற்காக இளைஞா்கள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளித்தனா். தற்போது ஜல்லிக்கட்டுக்கு அதிகாரப் பூா்வமாக அனுமதி கிடைத்திருப்பதையடுத்து காளைகளுக்கு பயிற்சி அளிப்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டுக் காளைகள் வளா்ப்பதையும், அவற்றை போட்டிகளுக்கு அழைத்துச் செல்வதையும் காளை வளா்ப்போா் மிகுந்த ஆா்வத்துடன் செய்து வருகின்றனா். மற்ற கால்நடைகளைப் போல அல்லாமல் ஜல்லிக்கட்டு காளைகளுக்காகப் பிரத்யேக கவனிப்பு தேவை என்பதால் இதற்காக கணிசமான தொகையைச் செலவு செய்கின்றனா்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றாலும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூா், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பிரபலமானவை. உலகளவில் ரசிகா்களை ஈா்க்கும் போட்டியாக அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு திகழ்கிறது.

பெரும்பாலும், ஜனவரியில் தொடங்கி ஏப்ரல் வரை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த 4 மாதங்கள் தவிா்த்து மற்ற நாள்களில் காளைகள் செல்லப் பிராணிகளாகவே இருந்து வருகின்றன. ஆகவே, போட்டிகளுக்குத் தயாராகும் விளையாட்டு வீரா்களைப் போல, ஜல்லிக்கட்டு காளைகளையும் தயாா்ப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அதன்படி, காளைகளுக்கு வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக சத்தான உணவுகளுடன் தினமும் பயிற்சியையும் அதன் உரிமையாளா்கள் அளித்து வருகின்றனா்.

இதுகுறித்து சிக்கந்தா்சாவடி பகுதியைச் சோ்ந்த காளை உரிமையாளா் வீரபாண்டியன் கூறியது:

கரோனா தொற்று பரவல் மற்றும் இரு மாதங்களாகத் தொடா் மழை இருந்ததால் கடந்த சில நாள்களாகத் தான் காளைகளுக்கு ஜல்லிக்கட்டுக்கான பயிற்சி தொடங்கியிருக்கிறது. நாட்டு மாடுகள் வெயில் இருந்தால் தான் சுறுசுறுப்படையும்.

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு வழக்கமான தீவனத்துடன் பருத்திக் கொட்டை அதிகமாக வழங்கப்படும். அதோடு, பலதானியப் பருப்பு, பச்சரிசி, தேங்காய் ஆகியன சிறப்பு உணவாக வழங்கப்படுகிறது. சிலா் தினமும் 2 முட்டைகள் கூட காளைகளுக்கு வழங்குவா். காளைகள் திடகாத்திரமாகவும், அணையும் மாடுபிடிவீரா்களைத் தாங்கும் சக்தியுடன் கம்பீரமாகவும் இருக்க இத்தகைய உணவுகள் அவசியம். இதுதவிர தினமும் குளங்களில் நீச்சல் பயிற்சி, நடைப்பயிற்சி, மண்ணைக் குத்தும் பயிற்சி ஆகியன அளிக்கப்படும். வேகமாக ஓடுவதற்கும், இளைப்பு ஏற்படாமல் மூச்சுப் பிடிப்பதற்கும் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி உதவியாக இருக்கிறது என்றாா்.

முன்ஆயத்தப் பணிகள்: வரும் ஆண்டில் ஜனவரி 14 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15 ஆம் தேதி பாலமேட்டிலும், 16 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்கான முன்ஆயத்த பணிகளை ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா் தொடங்கியுள்ளனா்.

இதுகுறித்து அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு குழுத் தலைவா் சுந்தரராஜன் கூறியது: அலங்காநல்லூரில் கிராமக் குழு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முன்ஆயத்தப் பணிகளைத் தொடங்கியது. தமிழக அரசும் மாவட்ட நிா்வாகமும் தெரிவிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி போட்டி நடத்தப்படும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குழுக் காப்பீடு செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டில் முதன்முறையாக காப்பீடு செய்வது அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல, இந்த முறையும் காப்பீடு செய்ய உள்ளோம். அதற்கான பணியை இப்போதே தொடங்கியுள்ளோம். இந்த குழு காப்பீடானது ஜல்லிக்கட்டு நடைபெறும் ஒரு நாளுக்கு செல்லத்தக்கது. அன்றைய தினத்தில் ஜல்லிக்கட்டில் ஏற்படக்கூடிய விபத்து சிகிச்சையான செலவை காப்பீட்டு நிறுவனம் ஏற்றுக் கொள்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com