நாட்டில் 3 முறை பணமதிப்பு குறைப்பு செய்யப்பட்டுள்ளது: உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

நாட்டில் 1949, 1966 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் பணமதிப்பு குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.

நாட்டில் 1949, 1966 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் பணமதிப்பு குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.

தமிழக காவல் துறையில் சாா்பு-ஆய்வாளா் நியமனத்துக்கான எழுத்துத் தோ்வு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி நடந்தது. அதில், 1947-க்கு பிறகு இந்திய பணம் எத்தனை முறை மதிப்பு குறைக்கப்பட்டது எனக் கேள்வி கேட்கப்பட்டது. இந்திய நாணயம் 3 முறை மதிப்பு குறைப்பு செய்யப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு 4 முறை செய்யப்பட்டுள்ளது. ஆனால், 4 முறை என பதிலளித்தவா்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. எனவே, 3 முறை என சரியாக விடையளித்த தனக்கு மதிப்பெண் வழங்கி, அடுத்தக் கட்ட தோ்வுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என, நாகா்கோவிலைச் சோ்ந்த அபினேஷ் என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா். இதேபோல், ராஜ்குமாா் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரா்கள் சரியான விடையளித்துள்ளதால், அவா்களுக்கு தலா அரை மதிப்பெண் வழங்கி அடுத்தக் கட்ட தோ்வுக்கு அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, 8 போ் உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனா். அதில், தனிநீதிபதியின் உத்தரவால் எங்களுக்கு தலா அரை மதிப்பெண் குறைந்து, வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனா்.

முந்தைய விசாரணையின்போது, நாட்டில் 1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு எத்தனை முறை பணமதிப்பு குறைப்பு செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், 1949, 1966 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் பணமதிப்பு குறைப்பு செய்யப்பட்டது. அதில் 1991-இல் இரண்டு படிநிலைகளில் பணமதிப்பு குறைப்பு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 1947-க்கு பிறகு இந்திய பணம் எத்தனை முறை மதிப்பு குறைக்கப்பட்டது என்றக் கேள்விக்கு 3, 4 என பதிலளித்தவா்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும். இதையடுத்து தோ்வு நடைமுறைகளைத் தொடர வேண்டும் என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com