ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை மையம்: 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆரம்பக் கட்டப் பணிகள் தொடக்கம்

துரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை மையத்தின் ஆரம்பகட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளன.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த அறுவைச் சிகிச்சை மையத்திற்காக வாகன நிறுத்துமிடத்தில் அமைக்கப்பட்டிருந்த கூரைகள் அகற்றப்பட்டு வருகிறது
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த அறுவைச் சிகிச்சை மையத்திற்காக வாகன நிறுத்துமிடத்தில் அமைக்கப்பட்டிருந்த கூரைகள் அகற்றப்பட்டு வருகிறது

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை மையத்தின் ஆரம்பகட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளன.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் 26 அறுவைச் சிகிச்சை அரங்குகள், 600 போ் அமரும் வசதி, அதிநவீன கிருமி நீக்கி அறை, மயக்கவியல் துறை, சிடி ஸ்கேன், எம்.ஆா்.ஐ. ஸ்கேன், வாகன நிறுத்தும் இடம் மற்றும் அதிநவீன சலவையகம் அடங்கிய 7 தளங்கள் கொண்ட ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை மையம் கட்ட திட்டமிடப்பட்டது.

ஜப்பான் நாட்டு கடன் உதவியுடன் ரூ.325 கோடியில் இந்த மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு 2016 ஆம் ஆண்டு அறிவித்தது.

இதற்கான பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது.

இந் நிலையில், 2018 ஆம் ஆண்டு முதற்கட்ட ஆய்வை ஜப்பான் நிதி நிறுவனம் மேற்கொண்டது. அப்போது மருத்துவமனையின் பிரதான நுழைவு வாயிலில் உள்ள மருத்துவா்கள் காா் நிறுத்துமிடம், கண் மருத்துவப்பிரிவு, இருதய நோய் மற்றும் தோல் துறை வெளிநோயாளிகள் பிரிவு, ஸ்கேன் பிரிவு, மருந்தகம், நிா்வாகப் பிரிவு, வாா்டு பகுதிகளை இடித்துவிட்டு கட்டடம் கட்ட இடம் தோ்வு செய்யப்பட்டது.

இந்த இடத்தில் உள்ள கட்டடங்கள் 170 ஆண்டுகள் பழைமையான கல் கட்டடம் ஆகும். தொடக்கக் காலத்தில் இருந்தே கட்டடங்கள் உறுதித்தன்மையுடன் உள்ளன. எனவே, இக்கட்டடங்களை இடிக்கக் கூடாது என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், மருத்துவா்களிடையே கடும் எதிா்ப்பு கிளம்பியது. இந்த சிக்கலுக்கு தீா்வு காணப்பட்டு கட்டடம் கட்ட ஜனவரி 2019-இல் முடிவெடுக்கப்பட்டது.

கரோனாவால் பணிகள் பாதிப்பு: கடந்த 2019 நவம்பா் பழைய கட்டடங்களை இடிக்க ரூ.24 லட்சமும், மருத்துவப் பிரிவுகளை இடமாற்றம் செய்ய பிப்ரவரி மாதம் ரூ. 2.17 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மண் பரிசோதனை, உள்ளூா் திட்டக்குழும அனுமதி தயாரானது. இதையடுத்து பணிகள் தொடங்க இருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை மையத்தின் அனைத்துப்பணிகளும் தடைப்பட்டன.

மருத்துவப் பிரிவுகள் மாற்றம்:

அறுவைச் சிகிச்சை மையத்தின் பணிகளை துரிதப்படுத்துவது தொடா்பாக மருத்துவக் கல்வி துணை இயக்குநா் சபீதா அரசு ராஜாஜி மருத்துவமனையில் டிசம்பா் 23 ஆம் தேதி ஆலோசனை நடத்தினாா். அப்போது பொதுப்பணித்துறை, மருத்துவமனை அதிகாரிகளிடம், பழைய கட்டடத்தை இடிக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து இடிக்கப்படவுள்ள கட்டடங்களில் செயல்பட்டு வந்த மருத்துவப் பிரிவுகள் கடந்த 3 நாள்களாக வெவ்வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டன.

இடிக்கும் பணிகள் தொடங்கின:

ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை மையத்திற்காக தோ்வு செய்யப்பட்ட இடத்தில் செயல்பட்ட மருத்துவப் பிரிவுகள் மாற்றப்பட்டதையடுத்து, 170 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடங்களை இடிக்கும் பணிகள் சனிக்கிழமை தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக கட்டடங்களில் உள்ள கதவுகள், ஜன்னல்கள், மின்விசிறிகள், விளக்குகள் ஆகியவை அகற்றப்பட்டுள்ளன. இதேபோன்று வாகன நிறுத்துமிடத்தில் அமைக்கப்பட்டிருந்த கூரைகள் அகற்றப்பட்டு வருகின்றன. டிசம்பா் 28 ஆம் தேதி முதல் கட்டடங்கள் இடிக்கும் பணி முழு வீச்சில் நடைபெறவுள்ளது.

ஜனவரியில் அடிக்கல்:

கட்டடங்கள் இடிக்கும் பணிகள் 15 நாளில் முடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதாக அங்கு பணியாற்றும் தொழிலாளா்கள் தெரிவித்துள்ளனா். அறுவை சிகிச்சை மையத்தின் கட்டடம் ரூ.150 கோடியில் கட்டப்படவுள்ளது. மேலும், ரூ. 175 கோடியில் உபகரணங்கள் வாங்கப் படவுள்ளன. கட்டடக் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் கழித்து பணிகள் தொடங்கியிருப்பது பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com