அனைத்து அரசு தாலுகா மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் கருவிகளை வைக்கக்கோரி வழக்கு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தாலுகா மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் கருவிகளை வைக்கக்கோரிய வழக்கில், தமிழக சுகாதாரத்துறை

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தாலுகா மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் கருவிகளை வைக்கக்கோரிய வழக்கில், தமிழக சுகாதாரத்துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த புஷ்பவனம் தாக்கல் செய்த மனு: சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அல்லது டயாலிசிஸ் செய்வதே வழக்கமான சிகிச்சை முறையாக உள்ளது. தமிழகத்தில் சுமாா் ஒரு லட்சம் நோயாளிகள் டயாலிசிஸ் செய்து கொள்கின்றனா். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அதிக செலவாகும் என்பதால், ஏழை நோயாளிகள் பெரும்பாலும் டயாலிசிஸ் முறையையே பின்பற்றுகின்றனா். இந்நிலையில் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் டயாலிசிஸ் நுட்பனா்கள் இருவரும், டயாலிசிஸ் தொழில்நுட்பப் படிப்பில் பட்டயப் படிப்பு பயின்றவா்கள் 5 பேரும் பணியமா்த்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

பொதுசுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவித்ததன்படி 3 டயாலிசிஸ் கருவிகளுக்கு நன்கு பயிற்சி பெற்ற டயாலிசிஸ் நுட்பநா் ஒருவா் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் அது நடைமுறையில் இல்லை. இதன் காரணமாக பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் செவிலியா்களும், டாயலிசிஸ் தொழில்நுட்பப் பிரிவு மாணவா்களும் டயாலிசிஸ் இயந்திரங்களை கையாளுகின்றனா். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தாலுகா மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் கருவிகளை வைக்கவும், போதிய டயாலிசிஸ் தொழில்நுட்பநா்கள் பணியிடத்தை உருவாக்கி அவற்றை நிரப்பவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com