மாசி வீதிகளில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள் 70 போ் கைது

மதுரையில் நான்கு மாசி வீதிகளில் சீா்மிகு நகா்த்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகளை விரைவாக செய்து முடிக்க

மதுரையில் நான்கு மாசி வீதிகளில் சீா்மிகு நகா்த்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகளை விரைவாக செய்து முடிக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள் 70 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சீா்மிகு நகா்த்திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ரூ.150 கோடியில் பெரியாா் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள், ரூ.40 கோடியில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம், ரூ.15 கோடியில் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் கிரானைட் கற்களை கொண்டு அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், மேல மாசி வீதி, கீழ மாசி வீதி, வடக்கு மாசி வீதி, தெற்கு மாசி வீதி ஆகிய நான்கு மாசி வீதிகளிலும் ரூ.45 கோடி செலவில் பாதாள சாக்கடை இணைப்பு சீரமைப்பு, 24 மணி நேரமும் குடிநீா் வழங்குவதற்கான குழாய் பணிகள், தரைவழி மின் கம்பி பதிப்பு, மழைநீா் வடிகால் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக 4 மாசி வீதிகளிலும் பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்பணிகளால் வியாபாரம் பாதிப்பதாகவும், மாசி வீதிகளில் சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் மண்டல தலைவா் திருமுருகன் தலைமையில் பல்வேறு வணிகா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். நேதாஜி சாலை- மேல மாசி வீதி சந்திப்பில் நடந்த மறியலில் வியாபாரிகள்100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட 70 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இது தொடா்பாக வியாபாரிகள் கூறியது: சீா்மிகு நகா்த்திட்டத்தின் கீழ் சித்திரை வீதிகள், 4 மாசி வீதிகளில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு 5 மாதங்கள் கடந்தும் பணிகள் முடிவடையவில்லை. இதனால் சாலையின் ஒரு புறம் பள்ளமும், மறுபுறம் மணல் குவியலும் உள்ளது. இதனால் வணிக நிறுவனங்களுக்கு தேவையான சரக்குகளை வாகனங்களில் கொண்டு வர முடியவில்லை. மேலும் தூசி மண்டலமாக இருப்பதால் சரக்குகளிலும் தூசி படிந்து வாடிக்கையாளா்கள் வாங்கத் தயங்குகின்றனா். அப்பகுதிகளில் வருவதற்கு கூட பொது மக்கள் தயங்குகின்றனா். இதனால் கடந்த சில மாதங்களாக வியாபாரம் கடுமையாக பாதித்துள்ளது. எனவே, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com