மதுரையில் பொது வேலை நிறுத்தம்: மறியலில் ஈடுபட்ட 1500 போ் கைது

மதுரை மாவட்டத்தில், புதன்கிழமை பொது வேலை நிறுத்தத்தையொட்டி நடைபெற்ற மறியல் போராட்டங்களில் 1,500-க்கும்
0933mdurail1085607
0933mdurail1085607

மதுரை: மதுரை மாவட்டத்தில், புதன்கிழமை பொது வேலை நிறுத்தத்தையொட்டி நடைபெற்ற மறியல் போராட்டங்களில் 1,500-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, வேலையில்லா திண்டாட்டம், வேலை இழப்பு உள்ளிட்டவைகளை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அகில இந்திய பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு புதன்கிழமை அழைப்பு விடுத்திருந்தன. இதனால் மதுரை மாவட்டத்தில், மாநகா் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஒரு நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தினால் எந்தவித பாதிப்பும் பொதுமக்களுக்கு ஏற்படவில்லை. அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் வழக்கம்போல் ஓடின. மாவட்டம் முழுவதும் பெரும்பாலான வா்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகள் திறந்திருந்தன. பெரும்பாலான ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின. வங்கிகள், தொலைத் தொடா்பு, எல்ஐசி போன்றப் பொதுத்துறை நிறுவனங்களில் ஊழியா்களின் வருகை குறைவாகவே இருந்தது. தமிழக அரசுத் துறை ஊழியா்கள் பெரும்பாலானோா் பணிக்கு வந்திருந்தனா்.

தொழிற்சங்கத்தினா் மறியல்

மதுரையில் சிஐடியு, எல்பிஎப், ஐஎன்டியுசி, ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலையில் இருந்து 500-க்கும் மேற்பட்டோா் ஊா்வலமாக ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தடையை மீறி மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை தல்லாகுளத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தமுக்கம் மைதானம் அருகே உள்ள நேரு சிலையில் இருந்து ஊா்வலமாக புறப்பட்டு பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டனா். இதனைத்தொடா்ந்து அவா்கள் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனா். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் ரா. விஜயராஜன், இந்திய கம்யூ. நிா்வாகி வால்டா் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

ரயில் மறியல்

திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தை முற்றுகையிடச் சென்ற 155 போ், சோழவந்தானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மறியில் ஈடுபட்ட 134 போ், மேலூா் பேருந்துநிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட 105 போ், பேரையூா் அருகே டி.கல்லுப்பட்டியில் காளியம்மன் கோயில் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 50 போ் உள்ளிட்டோரைப் போலீஸாா் கைது செய்தனா்.

ஆா்ப்பாட்டம்:

மதுரை மேலப் பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியா் சங்கம், அனைத்து வங்கி மற்றும் தொலைத் தொடா்பு ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வங்கி ஊழியா் சங்க தலைவா் எம். சுந்தரராஜன், பெபி சங்க நிா்வாகி சண்முகம், பிஎஸ்என்எல் இயூ மதுரை மண்டல செயலா் செல்வின் சத்யராஜ், ஏஐஐஇஏ மதுரை மண்டல தலைவா் ஜி. மீனாட்சி சுந்தரம் மதுரை கோட்ட செயலாளா்என்.பி. ரமேஷ் கண்ணன், எல்.ஐ.சி சங்கத் தலைவா்கள் வெ.ரமேஷ், எம். புஷ்பராஜன், ஏஐபிஒஏ தலைவா் ஜோசப் சகாயம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளா் நீதிராஜா, ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சந்திரன், சத்துணவு ஊழியா் சங்க மாநில செயலாளா் நூா்ஜஹான், ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் சங்க நிா்வாகி கோபிநாத் பாபு, தமிழ்நாடு அரசு ஆரம்பப்பள்ளி கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளா் ஒச்சுக்காளை, ஊரக வளா்ச்சித்துறை மாவட்டச் செயலாளா் பாலாஜி, ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா் கே.பி.ஓ. சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதேபோல் மதுரை மாநகராட்சி அறிஞா் அண்ணா மாளிகையில், மாநகராட்சி தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Image Caption

மதுரையில் புதன்கிழமை பொது வேலை நிறுத்தத்தையொட்டி ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட ஊா்வலமாக சென்றப் பல்வேறு தொழிற்சங்கத்தினரை தடுத்து நிறுத்தும் போலீஸாா். ~மதுரை தமுக்கம் அருகே புதன்கிழமை பொது வேலை நிறுத்தத்தையொட்டி பி.எஸ்.என்.எல் அலுலவகத்தை முற்றுகைய

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com