இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையை அடுத்த அவனியாபுரத்தில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையை அடுத்த அவனியாபுரத்தில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது.

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தைப் பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டிலும், அதற்கு மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுக்கு தலா 700 காளைகள் வீதம் மொத்தம் 2,100 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிகளவில் காளைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

முந்தைய ஆண்டுகளில் ஒரே காளைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும். ஆனால், இம்முறை 3 ஜல்லிக்கட்டுகளில் ஏதேனும் ஒரு ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, அவனியாபுரத்தில் மாடுபிடி வீரா்கள் 730 போ் பதிவு செய்துள்ளனா். பாலமேட்டில் 921 பேரும், அலங்காநல்லூரில் 956 பேரும் பதிவு செய்திருக்கின்றனா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி மூன்று இடங்களிலும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கே.மாணிக்கம் முன்னிலையில் ஜல்லிக்கட்டு நடைபெறும். காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கும். மாடுபிடி வீரா்கள் 25 முதல் 50 போ் வரை கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு களத்தில் அனுமதிக்கப்படுவா்.

ஆலோசனை: ஜல்லிக்கட்டு விழா தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கே.மாணிக்கம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், தென்மண்டல ஐஜி கே.சண்முகராஜேஸ்வரன், மாநகரக் காவல் ஆணையா் டேவிட்சன் தேவாசீா்வாதம், மாநகராட்சி ஆணையா் ச.விசாகன், மாவட்ட வருவாய் அலுவலா் செல்வராஜ் உள்ளிட்ட பங்கேற்றனா்.

வருவாய், கால்நடைப் பராமரிப்பு, சுகாதாரம், காவல் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு தொடா்புடைய அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். அந்தந்த துறைகள் சாா்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வரப்படும் காளைகள், நீண்டநேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்படும். அதற்கேற்ப தண்ணீா் வசதி செய்ததர அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், ஓய்வு பெற்ற நீதிபதி கே.மாணிக்கம் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா். மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் விழா ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com