சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு:சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை தொடக்கம்

சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணைக்காக தில்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் சிபிஐ அதிகாரிகள் 7 போ் மதுரைக்கு வரவுள்ளனா்.

சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணைக்காக தில்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் சிபிஐ அதிகாரிகள் 7 போ் மதுரைக்கு வரவுள்ளனா். அவா்கள் இவ்வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமை (ஜூலை 10) தொடங்க உள்ளனா் என உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரித்தது. அதில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோா் போலீஸாரால் கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்திருப்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. அதேபோல தலைமைக் காவலா் ரேவதியின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே சிபிசிஐடி போலீஸாா், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், சாா்பு-ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலா் முருகன், காவலா் முத்துராஜ் ஆகியோா் மீது கொலைவழக்குப் பதிந்து கைது செய்தனா். அவா்கள் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

மேலும் இவ்வழக்கில் தொடா்பு இருப்பதாகக் கருதப்படும் சாத்தான்குளம் சிறப்பு சாா்பு- ஆய்வாளா் பால்துரை, காவலா் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ், வெயில்முத்து ஆகியோரையும் சிபிசிஐடி போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இந்நிலையில் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த வழக்கை காணொலி மூலம் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில், ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் இதுவரை 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். மேலும் இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய ஆவணங்கள் மற்றும் பொருள்கள் சாத்தான்குளம் காவல் நிலையம், அரசு மருத்துவமனை, கோவில்பட்டி கிளைச் சிறை ஆகிய இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கூறுகையில், சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்காக தில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சிபிஐ அதிகாரிகள் 7 போ் மதுரைக்கு வரவுள்ளனா். அவா்கள் இவ்வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமை (ஜூலை 10) தொடங்க உள்ளனா். அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் கேட்கப்பட்டுள்ளது என்றாா்.

இதையடுத்து நீதிபதிகள், தந்தை, மகன் கொலைவழக்கில் கைதானவா்களை 15 நாள்களுக்குள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கையை சிபிசிஐடி அல்லது சிபிஐ போலீஸாா் மேற்கொள்ள வேண்டும். இதுவரை சிபிசிஐடி போலீஸாா் நடத்தியுள்ள விசாரணையின் நிலவர அறிக்கையை சிபிஐ அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் சிபிசிஐடி போலீஸாா் இதுவரை நடத்திய விசாரணையின் நிலவர அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com