சலவைத் தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணம் கோரி வழக்கு: அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு உத்தரவு
By DIN | Published On : 21st July 2020 11:10 PM | Last Updated : 21st July 2020 11:10 PM | அ+அ அ- |

மதுரை: சலவைத் தொழில் மற்றும் துணி தேய்க்கும் தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணம் வழங்குவது குறித்து அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த மணிகண்டன் தாக்கல் செய்த மனு: பொதுமுடக்கம் காரணமாக சலவை மற்றும் துணி தேய்க்கும் தொழிலாளா்கள் வருவாய் இன்றி பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளோம். தமிழகம் முழுவதும் சலவை செய்யும் மற்றும் துணி தேய்க்கும் தொழிலாளா்கள் சுமாா் 2 லட்சத்து 50 ஆயிரம் போ் உள்ளனா். ஆனால் சலவை தொழிலாளா்கள் நலவாரியத்தில் 40 ஆயிரம் போ் மட்டுமே உறுப்பினா்களாக உள்ளனா். இவா்கள் அனைவரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழக அரசு முடி திருத்தும் தொழிலாளா்கள், கைத்தறி தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கியதுபோல, சலவைத் தொழில் மற்றும் துணி தேய்க்கும் தொழிலாளா்களுக்கு வழங்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை. எனவே தமிழகம் முழுவதும் உள்ள சலவைத் தொழில் மற்றும் துணி தேய்க்கும் தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து அரசிடம் உரிய தகவல் பெற்று தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.