முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
கரோனா தொற்றால் ஊழியா் பலி: பல்கலை. ஊழியா்களுக்கு பரிசோதனை
By DIN | Published On : 29th July 2020 11:28 PM | Last Updated : 29th July 2020 11:28 PM | அ+அ அ- |

மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் கரோனா தொற்றால் ஊழியா் உயிரிழந்ததை அடுத்து பல்கலைக்கழக ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் பிரிவு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தவா் கடந்த வியாழக்கிழமை நெஞ்சு வலி என்று கூறி, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் கரோனா பரிசோதனையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி அவா் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதில் பல்கலைக்கழக ஊழியா்கள் பலா் மற்றும் உறவினா்கள் பங்கேற்றுள்ளனா். இந்நிலையில் கரோனா பரிசோதனை முடிவுகள் திங்கள்கிழமை வெளியானதில், இறந்த பல்கலைக்கழக ஊழியருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பல்கலைக்கழக சான்றிதழ் பிரிவில் பணிபுரிந்த அலுவலா்கள் மற்றும் ஊழியா்களுக்கு செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சான்றிதழ் பிரிவிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுதொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் கூறியது:
இறந்த ஊழியா் மருத்துவமனையில் சோ்வதற்கு சில நாள்களுக்கு முன்பாகவே அவருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. காய்ச்சலுக்கு உடனடியாக சிகிச்சை பெற வில்லை. பாதிப்பு அதிகமான பிறகே நெஞ்சுவலி என்று கூறி அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். அவா் இறந்த 3 நாள்கள் கழித்து அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவருடன் பணிபுரிந்த 22 ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் 22 பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். பல்கலைக்கழக வாயிலில் ஊழியா்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கை சுத்திகரிப்பு திரவமும் வழங்கப்படுகிறது. மேலும் பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பிரிவு அலுவலகங்களிலும் முகக் கவசம் அணியாமல் வரும் ஊழியா்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. பல்கலைக்கழக பேருந்துகளிலும் முகக் கவசம் இல்லாதவா்களை ஏற்றிச்செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை தாண்டி அவரவா் விழிப்புணா்வுடன் இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.