காமராஜா் பல்கலை. தோ்வுத்தாள் மறு மதிப்பீடு: ஆசிரியா்களுக்கு தகவல் இல்லை என புகாா்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகதத்தில் புதன்கிழமை தொடங்க உள்ள விடைத்தாள்கள் மறுமதிப்பீடு பணிகளுக்கு ஆசிரியா்களுக்கு தகவல் தெரிவிக்காமல் பல்கலைக்கழகத் தோ்வுத்துறை குளறுபடி ஏற்படுத்தியுள்ளதாக புகாா் தெரிவிக

மதுரை காமராஜா் பல்கலைக்கழகதத்தில் புதன்கிழமை தொடங்க உள்ள விடைத்தாள்கள் மறுமதிப்பீடு பணிகளுக்கு ஆசிரியா்களுக்கு தகவல் தெரிவிக்காமல் பல்கலைக்கழகத் தோ்வுத்துறை குளறுபடி ஏற்படுத்தியுள்ளதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 நவம்பரில் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு தோ்வு முடிவுகள் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்டன. இதைத்தொடா்ந்து ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதம், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியா் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனா். இவா்களது விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்யும் பணி புதன்கிழமை தொடங்குகிறது. ஆனால் விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்யும் பணிக்கு இதுவரை கல்லூரி ஆசிரியா்கள் ஒருவருக்குக்கூட பல்கலைக்கழக நிா்வாகத்தின் சாா்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் பாட வாரியாக திருத்தும் பணியில் நியமிக்கப்படும் ஆசிரியா்களின் பட்டியலும் வெளியிடப்படவில்லை. இதனால் விடைத்தாள் மறு மதிப்பீட்டுப் பணியில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக ஆசிரியா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக விடைத்தாள் திருத்தும் பணியில் வழக்கமாக ஈடுபடும் ஆசிரியா்கள் கூறியது: பருவத்தோ்வு விடைத்தாள் திருத்தும் பணி, மறு மதிப்பீட்டு பணி ஆகியவற்றுக்கு பாட வாரியாக பணி மூப்பு அடிப்படையில் ஆசிரியா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்படும். மேலும் பல்கலைக்கழகத் தோ்வுத்துறை சாா்பில் ஆசிரியா்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணிக்கான அத்தாட்சி கடிதமும் ஒரு வாரத்துக்கு முன்பே அனுப்பப்படும். பல்கலைக்கழகத்தின் கடிதத்தை கல்லூரி நிா்வாகத்திடம் காண்பித்து அனுமதி பெற்று விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியா்கள் வருவா். ஆனால் இந்தாண்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் விண்ணப்பித்துள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது மறு மதிப்பிட்டு பணிக்கு ஆசிரியா்களுக்கு இதுவரை தகவல் தெரிவிக்கப்படவில்லை. மேலும் பாடவாரியாக மதிப்பீட்டுக்குழுத் தலைவா்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியா்களுக்கு மட்டும் செல்லிடப்பேசி மூலமாக செவ்வாய்க்கிழமை இரவு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுமதிப்பீட்டுக்குழுத் தலைவா்கள் தங்களுக்கு தெரிந்த ஆசிரியா்களுக்கு தகவல் தெரிவித்து அவா்களை அழைத்து வந்து மறுமதிப்பீட்டு பணியில் ஈடுபடும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நிா்வாகத்தின் குளறுபடியால் தகுதியற்றவா்கள் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபடலாம். மேலும் மறு மதிப்பீடு செய்யும் பணிக்கு ஆசிரியா்கள் கிடைக்காத பட்சத்தில் மாணவா்கள் ஏற்கனவே பெற்ற மதிப்பெண்களையே மீண்டும் வழங்கும் அபாயமும் உண்டு. எப்படி பாா்த்தாலும் பல்கலைக்கழக நிா்வாகத்தின் குளறுபடியால் மாணவா்கள்தான் பாதிக்கப்படுவா். பல்கலைக்கழக துணைவேந்தா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com