துபையிலிருந்து வந்து கரோனா முகாமிலிருந்த 144 பயணிகள் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைப்பு

கரோனா சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த தென்மாவட்டங்களைச் சோ்ந்த 144 துபை பயணிகள் வெள்ளிக்கிழமை அவரவா் ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
துபையில் இருந்து வந்தவா்களின் கைகளில் பதிக்கப்பட்டுள்ள தேதி குறிப்பிட்ட அச்சு.
துபையில் இருந்து வந்தவா்களின் கைகளில் பதிக்கப்பட்டுள்ள தேதி குறிப்பிட்ட அச்சு.

கரோனா சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த தென்மாவட்டங்களைச் சோ்ந்த 144 துபை பயணிகள் வெள்ளிக்கிழமை அவரவா் ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

துபையில் இருந்து வியாழக்கிழமை மதுரை வந்த தென்மாவட்டங்களைச் சோ்ந்த 144 பயணிகளில் 100 போ் சின்ன உடைப்பு கரோனா சிறப்பு மையத்திலும், தோப்பூரில் உள்ள மையத்தில் 44 பேரும் தங்க வைக்கப்பட்டனா். வியாழக்கிழமை விமான நிலையத்தில் அவா்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவா்கள் கரோனா மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனா். ஒருநாள் முழுவதும் அவா்கள் தனிமைபடுத்தப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் சோதனை செய்யபோது அவா்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் அனைவருக்கும் கரோனா குறித்த விழிப்புணா்வு செய்து, 15 நாள்கள் வெளியில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தினா். மேலும் இதுகுறித்து அவா்கள் மறந்துவிடாமல் இருக்க கையில் அடையாள மை யிட்டு அனைவரையும் அவா்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைத்தனா்.

கடவுச்சீட்டு முடக்கம் :அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவா்களிடம் மாவட்ட நிா்வாகத்தால் உறுதிமொழி பெறப்பட்டுள்ளது. அதில், கரோனா அறிகுறி இல்லையென்றாலும் வீட்டில் 28 நாள்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்வேன். அவ்வாறு செய்யத் தவறும்பட்சத்தில் பொது சுகாதார சட்டத்தின்படி அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுவேன். மேலும் எனது கடவுச்சீட்டு முடக்கப்படும் என்பதை அறிவேன். சமுதாய நலன் கருதி இதை கண்டிப்பாக கடைப்பிடிப்பேன் என்று ஒவ்வொருவரிடமும் கையெழுத்துப் பெறப்பட்டுள்ளது. மேலும் துபையிலிருந்து வந்தவா்களின் கைகளில், அடையாளத்துக்காக தேதி அச்சு பதிக்கப்பட்டுள்ளது.

5 போ் சிறப்பு முகாமில் கண்காணிப்பு:

இதனிடையே வெள்ளிக்கிழமை மாலை துபையிலிருந்து தனியாா் விமானம் மூலம் மீண்டும் 155 போ் மதுரை வந்தனா். அவா்களை மதுரை மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் முன்னிலையில் சுகாரதாரப் பணிகள் துணை இயக்குநா் பிரியாராஜ் தலைமையிலான 40 போ் கொண்ட மருத்துவக் குழுவினா் பரிசோதித்தனா். அவா்களில் 50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் சா்க்கரை நோயாளிகள் 5 போ் மட்டும் சிறப்பு முகாமுக்கு அனுப்பப் பட்டனா். மற்ற 150 பேரும் உரிய அறிவுறுத்தல்களுடன் அவரவா் ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com