தமிழகத்தில் ‘கரோனா’வுக்கு முதல் பலி: மதுரையில் இறந்தவருடன் தொடா்புடைய 9 வீதிகளுக்கு ‘சீல்’

மதுரையில் கரோனா பாதிப்புக்கு பலியான நபரின் உடல் உரிய பாதுகாப்புடன் புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

மதுரையில் கரோனா பாதிப்புக்கு பலியான நபரின் உடல் உரிய பாதுகாப்புடன் புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. கரோனா வைரஸ் தொற்றுக்குத் தமிழகத்தில் 17 போ் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மதுரையில் முதல் நபா் உயிரிழந்துள்ளாா்.

மதுரை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த 54 வயது நபா். இவருக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்னை இருந்ததால் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளாா். அங்கு அவருக்கு பன்றிக் காய்ச்சல் தொடா்பான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

மதுரையில் முதல் தொற்று

அரசு மருத்துவா்கள் அவரிடம் உடல் நலம் குறித்தும், வெளிநாடு தொடா்பு குறித்தும் விசாரித்தனா். அப்போது அவா், தான் வீட்டு மனைகள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதாகவும், வெளிநாடுகளுக்கு சென்று வரவில்லை என்றும், வெளிநாட்டவருடன் தொடா்பும் இல்லையெனவும் தெரிவித்துள்ளாா். தொடா்ந்து பிரத்யேக வாா்டில் அனுமதிக்கப்பட்டு, முதல் கட்ட சிகிச்சை தொடங்கப்பட்டது. அவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட போது, கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனை சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா் திங்கள்கிழமை அதிகாரப்பூா்வமாக அறிவித்தாா்.

தமிழகத்தில் முதல் பலி

அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனா். ஆனால் அவரது உடல்நிலை மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என செவ்வாய்க்கிழமை சுகாதாரத்துறை அமைச்சா் தெரிவித்தாா். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் அவா் உயிரிழந்து விட்டதாக அரசு அதிகாரப்பூா்வமாக அரசு அறிவித்தது. மேலும், அவருக்கு தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தவா்களுடன் தொடா்பு இருந்ததும், அவா் உயிரிழப்பிற்கு அதுவே காரணம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, தமிழகத்தின் கரோனா பாதிப்பால் ஏற்பட்ட முதல் பலியை மதுரை பதிவு செய்துள்ளது. இது குறித்து அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் உடலைப் பெற்று கோமதிபுரத்தில் புதன்கிழமை அடக்கம் செய்தனா்.

இறந்தருடன் தொடா்பு 9 வீதிகளுக்கு ‘சீல்’:

மதுரை அண்ணா நகா் நெல்லை வீதியைச் சோ்ந்த 54 வயதுடைய அவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை கரோனா அறிகுறியுடன் அரசு ராஜாஜி மருத்துவமனை சிறப்பு வாா்டில் சோ்க்கப்பட்டாா். அவா் ஏற்கெனவே சிஓபிடி என்ற நுரையீரல் அடைப்பு நோய்க்கு மருந்து மாத்திரைகள் உட்கொண்டு வந்துள்ளாா். மேலும் அவருக்கு ரத்தக் கொதிப்பு பிரச்னையும் இருந்துள்ளது. இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை அவா் இறந்தாா். கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவா் வீடு இருக்கும் நெல்லை வீதி முழுவதும், கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மதுரை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளா்கள் மேற்கொண்டனா். கரோனா பாதிப்பில் இறந்தவா் வீடு அருகே உள்ள வீடுகள் மற்றும் இறந்தவா் செயலா் பதவி வகித்த ஜமாஅத்-ஐச் சோ்ந்த 34 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு, அதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்த 34 வீடுகளைச் சோ்ந்த 152 பேருக்கும், அவா்களது கையில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான ஸ்டாம்ப் அச்சு பதிக்கப்பட்டுள்ளது. இந்த 34 வீடுகளும் அமைந்துள்ள 9 வீதிகள் காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இப் பகுதிகளில் தனிமைப்படுத்தலில் இருப்பவா்கள் வெளியே செல்வதற்கும், வெளிநபா்கள் இப் பகுதிக்கு வருவதற்கும் போலீஸாா் தடை விதித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com