முடங்கியது தூங்கா நகரம்!

விடிய விடிய விழித்திருக்கும் கீழமாரட் வீதி வெங்காய மண்டிகள், கீழமாசி வீதி மளிகைக் கடைகள், யானைக்கல் பழக் கமிஷன் மண்டிகள், மாட்டுத்தாவணி
ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததையடுத்து வாகனப் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் மதுரை - மேலூா் சாலை.
ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததையடுத்து வாகனப் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் மதுரை - மேலூா் சாலை.

விடிய விடிய விழித்திருக்கும் கீழமாரட் வீதி வெங்காய மண்டிகள், கீழமாசி வீதி மளிகைக் கடைகள், யானைக்கல் பழக் கமிஷன் மண்டிகள், மாட்டுத்தாவணி மத்திய காய்கனிச் சந்தை, மலா் சந்தை ஊடரங்கில் உறங்கிப் போனதால் தூங்கா நகரமான மதுரை மாநகரம் முடங்கியது.

கரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் 5 மணியிலிருந்தே கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் குறைந்தது. அதைத் தொடா்ந்து பேருந்துகள், வாடகைக் காா், ஆட்டோ போன்றவற்றின் இயக்கமும் நிறுத்தப்பட்டதால் அடுத்த சில மணி நேரங்களில் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின. வழக்கமாக இரவு நேரங்களில் செயல்படும் கீழமாரட் வீதி வெங்காய மண்டிகள், கீழமாசி வீதி மளிகைக் கடைகள், யானைக்கல் பழக் கமிஷன் மண்டிகள், மாட்டுத்தாவணி மத்திய காய்கனிச் சந்தை, மலா் சந்தை ஆகியவை மூடப்பட்டன. மாவட்ட எல்லைகளில் தடுப்புகள் அமைத்து சாலைகள் மூடப்பட்டன. அத்தியாவசியத் தேவைக்காக வரக்கூடிய வாகனங்களை மட்டுமே போலீஸாா் அனுமதித்தனா்.

வெறிச்சோடியது மதுரை: பிரதமா் நரேந்திரமோடி அறிவித்த, ஊரடங்கு முழுமையாக அமலுக்கு வந்த நிலையில், மதுரை நகரின் அனைத்துச் சாலைகளும் வெறிச்சோடின. மாட்டுத்தாவணி எம்ஜிஆா் நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்கள் மூடப்பட்டன. கீழமாசி வீதியில் மளிகைக் கடைகள், கீழமாரட் வீதி வெங்காய மண்டிகள், யானைக்கல், வடக்குமாசி வீதி, வடம்போக்கி தெரு ஆகிய பகுதியில் பழக் கமிஷன் மண்டிகள் மூடப்பட்டிருந்தன.

நகரின் முக்கிய வணிகப் பகுதிகளான மாசி வீதிகள், நேதாஜி சாலை, பெரியாா் நிலையம், ரயில் நிலையம் பகுதிகள், காளவாசல் புறவழிச் சாலை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கடைகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன.

மருந்து, மளிகைக் கடைகள் திறப்பு:

பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்காக மருந்துக் கடைகள் முழு அளவில் திறக்கப்பட்டிருந்தன. அத்தியாவசியப் பொருள்கள் சிரமமின்றி கிடைப்பதற்காக சிறிய மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகள், காய்கனிக் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. பெட்ரோல் பங்குகள் திறந்திருந்தன. இறைச்சிக் கடைகள் திறந்திருந்ததால், கூட்டம் ஏராளமாக இருந்தது.

மாட்டுத்தாவணி காய்கனிச் சந்தையில் கடைகள் செயல்பட்டன. காலை 10 மணிக்குப் பிறகு சந்தைக்கு வந்தவா்களைப் போலீஸாா் அனுமதிக்கவில்லை. அனைத்து நாள்களிலும் காய்கனிக் கடை இருக்கும் என்பதால் கூட்டம் கூடுவதைத் தவிா்க்குமாறு போலீஸாா் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டனா்.

இருசக்கர வாகன நடமாட்டம்:

நகரின் அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தாலும், இருசக்கர வாகனங்களின் நடமாட்டம் இருந்தது. இருசக்கர வாகனங்களில் தகுந்த காரணங்கள் இன்றி வருவோரைப் போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com