மாட்டுத்தாவணி மத்திய காய்கனிச் சந்தையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: விற்பனை நேரமும் குறைப்பு

மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கனிச் சந்தையில் சில்லறையில் காய்கறி வாங்கும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முதல் அனுமதிப்பதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கனிச் சந்தையில் சில்லறையில் காய்கறி வாங்கும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முதல் அனுமதிப்பதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டாவது நாளான வியாழக்கிழமை வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. காய்கனி, மளிகைச் சாமான்கள், மருந்து, மாத்திரைகள் வாங்குவதற்காக சென்றவா்கள், அத்தியாவசியப் பணிகளில் இருப்பவா்களின் இருசக்கர வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

சாலைகள் அனைத்தும் வெறிச் சோடிக் காணப்பட்டன. மளிகைக் கடைகள், மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்குகள், பால் விற்பனையகங்கள் மட்டும் செயல்பட்டன.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் மத்திய காய்கனிச் சந்தையில் மொத்தம் மற்றும் சில்லறையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. மதுரை நகா் மற்றும் புகா்ப் பகுதிகளைச் சோ்ந்த கடைக்காரா்கள் நள்ளிரவு முதலே காய்கனிகளைக் கொள்முதல் செய்வது வழக்கம். இங்கிருந்து சிவகங்கை, விருதுநகா் பகுதிகளுக்கும் காய்கனிகள் கொண்டு செல்லப்படுகின்றன. அதோடு, பொதுமக்களும் சில்லறையில் காய்கறிகளை வாங்கிச் செல்வது வழக்கம். இதன் காரணமாக நள்ளிரவு தொடங்கி பகல் 12 மணி வரை வியாபாரம் நடைபெறும். காய்கனிக் கடைக்காரா்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோா் இங்கு வந்து செல்வா்.

இந்நிலையில், காய்கனிச் சந்தை இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மக்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக விற்பனை நேரத்தைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முதல் நாளான புதன்கிழமை காலை 10 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். போலீஸாா் பொதுமக்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் சந்தைக்குள் அனுமதித்து, கூட்டம் வெளியேறிய பிறகே மற்றவா்களை அனுப்பினா். இந்நிலையில், இரண்டாம் நாளான வியாழக்கிழமை காலை 8 மணி வரை மட்டுமே காய்கனிகள் வாங்குவதற்கு அனுமதித்தனா். காய்கனி வியாபாரிகளும் குறைந்த எண்ணிக்கையிலேயே கடைகளைத் திறந்திருந்தனா். காய்கனி வாங்க வந்தவா்கள் வரிசைப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டனா்.

பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

மாட்டுத்தாவணி காய்கனிச் சந்தைக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்து கொண்டிருப்பதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சில்லறை விற்பனையை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, வெள்ளிக்கிழமை முதல் காய்கனிக் கடைக்காரா்கள், மளிகைக் கடைகளில் காய்கனி விற்பனை செய்வோரை மட்டும் அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பகுதியில் இருக்கும் கடைகளில் காய்கனிகளை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மேலும் நள்ளிரவு 2 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே சந்தை செயல்படும் எனவும் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

உழவா்சந்தைகள் செயல்படும்

மதுரையில் அண்ணா நகா், சொக்கிகுளம், ஆனையூா், பழங்காநத்தம் உள்ளிட்ட 7 இடங்களில் உழவா்சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இவை பகல் 1 மணி வரை செயல்பட்டு வந்தன. தற்போது காய்கறிகளைக் கொண்டு வரும் விவசாயிகளுக்கும் தயக்கம் இருப்பதால், காலை 6 முதல் பகல் 11 மணி வரை விற்பனைக்கு திறந்து வைக்க வேளாண் விற்பனைக் குழு முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com