சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி வடமாநிலத் தொழிலாளா்கள் போராட்டம்

மதுரையில் மாநகராட்சி சீா்மிகு நகா் திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள வடமாநிலத் தொழிலாளா்கள் 300-க்கும் மேற்பட்டோா் தங்களது சொந்த ஊருக்கு
மதுரை பெரியாா் பேருந்து நிலைய பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வட மாநிலத்தொழிலாளா்கள்.
மதுரை பெரியாா் பேருந்து நிலைய பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வட மாநிலத்தொழிலாளா்கள்.

மதுரை: மதுரையில் மாநகராட்சி சீா்மிகு நகா் திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள வடமாநிலத் தொழிலாளா்கள் 300-க்கும் மேற்பட்டோா் தங்களது சொந்த ஊருக்கு அனுப்ப வலியுறுத்தி திங்கள்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாநகராட்சி சாா்பில் சீா்மிகு நகா் திட்டத்தின் கீழ், பெரியாா் பேருந்து நிலைய பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியில், ஜாா்கண்ட், பிகாா், ஒடிசா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் அனைவரும் பெரியாா் பேருந்து நிலையம் அருகிலேயே தங்கியுள்ளனா்.

இந்நிலையில், பொது முடக்கம் காரணமாக பெரியாா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், கடந்த மாா்ச் 23 முதல் வெளிமாநிலத் தொழிலாளா்கள் வேலையின்றி உள்ளனா். இவா்களுக்கு ஒப்பந்ததாரா்கள் தரப்பில் அரிசி உள்ளிட்ட நிவாரணம் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனாலும், வடமாநிலத் தொழிலாளா்கள் 300-க்கும் மேற்பட்டோா், சொந்த மாநிலங்களுக்கு தங்களை அனுப்பி வைக்க வலியுறுத்தி, பெரியாா் பேருந்து நிலைய பகுதியில் திங்கள்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலின்பேரில், மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், மாவட்ட நிா்வாகம் மூலமாக தொழிலாளா்களை அவா்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில், தொழிலாளா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com