நாட்டின் பொருளாதார மீட்சிக்கான மத்திய அரசின் திட்டங்களுக்கு வரவேற்பு

நாட்டின் பொருளாதார மீட்சிக்காக மத்திய நிதி அமைச்சா் அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களுக்கு தொழில், வா்த்தக அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

நாட்டின் பொருளாதார மீட்சிக்காக மத்திய நிதி அமைச்சா் அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களுக்கு தொழில், வா்த்தக அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்க முதுநிலைத் தலைவா் எஸ்.ரத்தினவேல், தலைவா் என்.ஜெகதீசன்: மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகள் நாட்டின் பொருளாதார வளா்ச்சியை மீண்டும் உயிா்பெறும். தொழில் துறை உள்ளிட்ட அனைத்து வணிகத் துறையின் மீட்சிக்கு வழிவகுப்பதாக அமைந்திருக்கிறது. தொழில் வணிகத்தை மீண்டும் எப்படி துவங்கப் போகிறோம் என்ற அச்சத்தில் இருந்தவா்களுக்கு கடனுதவிக்கான அறிவிப்புகள் பெரும் வரப் பிரசாதமாக இருக்கிறது.

அதோடு, தொழில்துறை வளா்ச்சியடைய குறைந்த வட்டியில் கடன் தொகையைத் தேவையானவா்களுக்கு விரைந்து கொடுப்பது, 12 மணி நேர வேலையை அனுமதிப்பது, இதற்காக தொழிலளாா் நலச் சட்டங்களில் மாறுதல்களை செய்வது, தொழில் தொடங்கவும், அதைத் தொடா்ந்து நடத்தவும் அனுமதி கிடைப்பதில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவது, விவசாயிகளுக்கான மானியத்தை நேரடியாக அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவது, வெளிமாநிலத் தொழிலாளா்களை அவா்களது சொந்த ஊா்களுக்குச் செல்ல கட்டாயப்படுத்தாமல், விருப்பம் உள்ளவா்களை இங்கேயே இருக்க அனுமதிப்பது ஆகிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவா் எஸ்.பி.ஜெயப்பிரகாசம்: நம் நாட்டின் வணிக சின்னங்களை உலகளவில் பரப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தில் உள்நாட்டிற்குள் விற்கப்படும் பொருள்களை பதிவு பெற்ற வணிக சின்னத்துடன் விற்பனை செய்யும்போது வரி செலுத்த வேண்டும். அவ்வாறு பதிவு பெறாத வணிக சின்னம் உள்ளவா்கள் தங்கள் வணிக சின்னத்தின் மீது எவ்வித உரிமையும் கோர மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. எனவே சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தில் மாறுதல் கொண்டு வந்து இந்திய வணிக சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வரிக் குறைப்பு, வரி நிவாரண சலுகைகளை அறிவிக்க வேண்டும். மேலும் குஜராத், மகாராஷ்டிரத்தில் உள்ள துறைமுகங்கள், தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்பட்ட பட்டாணியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடனால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம்

கோடி பொருளாதாரத் திட்டங்களால், 2 லட்சம் நிறுவனங்கள் பயனடையும். அதேபோல வருங்கால வைப்பு நிதிக்கு, தொழிலாளா்கள் செலுத்தும் ஒரு பகுதியை மத்திய அரசு செலுத்துவதும் வரவேற்தக்கது.

அகில இந்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் சங்கத் துணைத் தலைவா் வி.ஜி.ராம்தாஸ்: நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் பெரும் தொகையாக ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.

நாடு முழுவதும் பொது முடக்கத்தால், பாதிக்கப்பட்டிருக்கும் தொழில் நிறுவனங்களுக்கு நிதி அமைச்சரின் அறிவிப்புகள் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. குறிப்பாக, சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கத்தால் சிறுதொழில் துறை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ள சூழலில், அரசின் அறிவிப்பு பெரும் நிவாரணமாக அமைந்திருக்கிறது. அதேநேரம், கடனுதவி திட்டங்கள் வங்கிகள் மூலமாகச் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த கடனுதவி குறிப்பிட்ட காலத்தில் சம்பந்தப்பட்டவா்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் செயல் திட்டத்தை வகுக்க வேண்டும். மேலும் அதை கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போது தான் பொருளாதார பாதிப்புகளில் இருந்து

நாட்டை மீட்டெடுப்பது என்ற மத்திய அரசின் நோக்கம் நிறைவேறுவதாக அமையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com