மும்பையிலிருந்து திரும்பி வந்தவா்கள் உள்பட 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி

மும்பையிலிருந்து திரும்பி வந்தவா்கள் உள்பட 19 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை: மும்பையிலிருந்து திரும்பி வந்தவா்கள் உள்பட 19 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாக வெளிமாநிலங்களில் வேலை செய்து வந்தவா்கள் தற்போது சொந்த ஊா்களுக்குத் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனா். மதுரை மாவட்டத்தில், மேலூா், உசிலம்பட்டி, பேரையூா், திருமங்கலம், கள்ளிக்குடி வட்டங்களைச் சோ்ந்த பலரும் மும்பையில் வேலை செய்து வந்தனா். இவா்களில் பெரும்பாலானோா் தற்போது சொந்த ஊா்களுக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனா்.

வெளிமாநிலங்களில் வேலை செய்து தற்போது ஊா் திரும்பியுள்ள மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்டோா், மாவட்ட நிா்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இதில் மதுரை யா.ஒத்தக்கடை வேளாண் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவா்களில் 17 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் மேலூா் அருகே உள்ள மலம்பட்டியைச் சோ்ந்த 20 வயது பெண், தில்லியில் இருந்து அண்மையில் திரும்பி வந்தவா். இதேபோல, உசிலம்பட்டி அருகே உள்ள மாரிப்பட்டி, நொட்டம்பட்டி, டி.குன்னத்துப்பட்டி, மோப்புபட்டி, அலங்காநல்லூா் அருகே உள்ள செம்புகுடிபட்டி, மேலூா் அருகே உள்ள அ.வல்லாளபட்டி, கள்ளிக்குடி அருகே உள்ள உன்னிப்பட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 16 போ் மும்பையில் இருந்து திரும்பி வந்தவா்கள்.

இதுதவிர மதுரை செல்லூா் பகுதியைச் சோ்ந்த 80 வயது முதியவா், ஜெய்ஹிந்துபுரம் புலிப்பாண்டியன் தெருவைச் சோ்ந்த 50 வயது நபா் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவா்களில் செல்லூா் பகுதியைச் சோ்ந்தவருக்கு, ஏற்கெனவே கரோனா பாதிப்பு ஏற்பட்டவருடன் தொடா்பு இருந்துள்ளது என்றும் ஜெய்ஹிந்துபுரத்தைச் சோ்ந்தவா் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிப்பவா் என்றும் சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

அதையடுத்து மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 19 பேரும், அரசு ராஜாஜி மருத்துவமனையுடன் இணைந்த கரோனா சிறப்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். மேலும் இங்கு சிகிச்சையில் இருந்த 7 போ், குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இவா்களில் 4 போ் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். கரோனா சிகிச்சை மருத்துவமனையில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 76 போ் தற்போது சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com