ஆன்-லைன் விளையாட்டுகளுக்கு தடை கோரி மனு: விராட்கோலி, கங்குலி, தமன்னாவுக்கு நோட்டீஸ்

ஆன்-லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கக் கோரும் மனுவுக்கு கிரிக்கெட் வீரர்கள் கங்குலி, விராட் கோலி, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற 
ஆன்-லைன் விளையாட்டுகளுக்கு தடை கோரி மனு: விராட்கோலி, கங்குலி, தமன்னாவுக்கு நோட்டீஸ்

மதுரை: ஆன்-லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கக் கோரும் மனுவுக்கு கிரிக்கெட் வீரர்கள் கங்குலி, விராட் கோலி, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி, முத்துக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனு: 
ஆன்-லைன் விளையாட்டுகளுக்கு கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நடிகர், நடிகைகளைக் கொண்டு விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இதை நம்பி, ஏராளமான இளைஞர்கள் ஆன்-லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களில் ஈடுபடுகின்றனர். பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய்துள்ளனர். 
எனவே, ஆன்-லைன் ரம்மி மற்றும் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், ஆன்-லைன் சூதாட்டத்தை ஊக்கப்படுத்தும் விளம்பரங்களில் நடிக்கும் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கங்குலி, திரைப்பட நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர். 
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பிரபலமானவர்கள் விளம்பரம் செய்யும் போது பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் பணம் சம்பாதிப்பதில் தான் கவனம் செலுத்துகின்றனர். பொதுமக்களில் பலரும் தங்களைப் பின்பற்றுவார்கள் என்பது தெரிந்திருந்தும் பிரபலமானவர்கள் அவ்வாறு செயல்படுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர்.
அப்போது மனுதாரர் தரப்பில், ஏற்கெனவே வடிவமைக்கப்பட்ட சூதாட்ட விளையாட்டில் வெற்றி பெற இயலாது என்பதை உணராமல் பலரும் அடிமையாகி வாழ்க்கையை இழந்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், தெலங்கானா மாநிலம் பணம் வைத்து விளையாடும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையும் தடை செய்துள்ளது. மீறுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும் என அறிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஜூலையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவைப் பின்பற்றி தமிழக அரசு தற்போதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரியவருகிறது என்றனர்.
இது தொடர்பாக சட்ட வரைவு ஏதேனும் உள்ளதா? இந்த விளையாட்டின் மூலம் வரும் வருமானம் யாரைச் சென்றடைகிறது? எனக் கேள்வி எழுப்பினர்.
அரசு தரப்பில், தமிழகமே முதன்முதலில் ஆன்-லைன் லாட்டரியைத் தடை செய்தது. அதேபோல ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டு விவகாரத்தையும்  தீவிரமாக அணுகி ஆலோசித்து வருகிறது. ஆகவே, இதுகுறித்து பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையேற்ற நீதிபதிகள், இதுகுறித்து 10 நாள்களில் அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டனர். 
இந்த விவகாரத்தில் அரசு உரிய முடிவெடுக்கும் என நம்புவதாகத் தெரிவித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் கங்குலி, விராட்கோலி, திரைப்பட நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 19- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com