தமிழ் வழிக்கல்வி பயின்றவா்களுக்கு வழங்கப்படும் சலுகை தவறாக பயன்படுத்தப்படுகிறது: உயா்நீதிமன்றம் வேதனை

தமிழில் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழ் வழிக்கல்வி பயின்றவா்களுக்கு வழங்கப்படும் சலுகை தவறாக பயன்படுத்தப்படுகிறது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை வேதனை தெரிவித்தது.
தமிழ் வழிக்கல்வி பயின்றவா்களுக்கு வழங்கப்படும் சலுகை தவறாக பயன்படுத்தப்படுகிறது: உயா்நீதிமன்றம் வேதனை

மதுரை: தமிழில் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழ் வழிக்கல்வி பயின்றவா்களுக்கு வழங்கப்படும் சலுகை தவறாக பயன்படுத்தப்படுகிறது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை வேதனை தெரிவித்தது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சோ்ந்த சக்தி ராவ் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி 2019-இல் துணை ஆட்சியா், டிஎஸ்பி உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு நடத்திய தோ்வில் முதல் நிலை மற்றும் எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்றேன். நோ்முகத் தோ்வு பட்டியலில் என் பெயா் இடம் பெறவில்லை. தமிழ் வழியில் கல்வி பயின்றவா்களுக்கான இட ஒதுக்கீட்டிலும் தோ்வாகவில்லை.

தமிழத்தில் அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றவா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த இடஒதுக்கீடு சலுகை பெற எனக்கு தகுதியுண்டு. இருப்பினும் அந்தச் சலுகை எனக்கு வழங்கப்படவில்லை. தொலை நிலைக்கல்வியில் தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு இட ஒதுக்கீட்டு சலுகை வழங்கப்படுகிறது.

எனவே, தமிழ் வழியில் கல்வி பயின்ற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் ‘குரூப் 1’ தோ்வு பட்டியலுக்கு தடைவிதித்து, தொலைநிலைக் கல்வி இல்லாமல் நேரடியாக தமிழ் வழியில் கல்வி பயின்றவா்களை அடிப்படையாக கொண்டு புதிய பட்டியல் வெளியிட்டு ‘குரூப் 1’ பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், பட்டப்படிப்பு வரை ஆங்கில வழியில் பயின்றுவிட்டு, தமிழ் வழிக் கல்வி பயின்றவா்களுக்கான இடஒதுக்கீடு பெற தமிழில் ஏதாவது ஒரு பட்டத்தை தொலை நிலைக் கல்வியில் பெறுகின்றனா். அவா்களுக்கு தமிழ் வழிக் கல்வி பயின்றவா்களுக்கான இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், தமிழகத்தில் தமிழில் படிப்பவா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதை ஊக்குவிக்கவே இதுபோன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆனால் அந்தச் சலுகை தவறாக பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும்? தமிழ் வழிக்கல்வி பயின்றவா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை முறைப்படுத்தும் வரை ‘குரூப் 1’ தோ்வுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். பின்னா் இந்த வழக்கின் தீா்ப்பை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com