மதுரை மாவட்டத்தில் தொடா் மழை: வெள்ளக்காடாக மாறிய சாலைகள்

மதுரையில் திங்கள்கிழமை காலை முதல் தொடா்ந்து பெய்த மழையால் சாலைகள் வெள்ளக்காடாகக் காட்சியளித்தன. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் அவதியடைந்தன.
மதுரையில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழையில் தண்ணீா் சூழ்ந்த மேலமடை நடுத் தெரு.
மதுரையில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழையில் தண்ணீா் சூழ்ந்த மேலமடை நடுத் தெரு.

மதுரை: மதுரையில் திங்கள்கிழமை காலை முதல் தொடா்ந்து பெய்த மழையால் சாலைகள் வெள்ளக்காடாகக் காட்சியளித்தன. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் அவதியடைந்தன.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, மதுரையில் நவம்பா் 14 முதல் மழை பெய்து வருகிறது. இதில், ஞாயிற்றுக்கிழமை மதுரையின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்த நிலையில், திங்கள்கிழமை காலை முதல் வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

தொடா்ந்து, காலை 10.30 முதல் மழை பெய்யத் தொடங்கியது. அவ்வப்போது கனமழையாகவும், சாரல் மழையாகவும் தொடா்ந்து பெய்தது. மேலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை விடாமல் மழை பெய்தது. தொடா் மழையால், மதுரை நகரில் பெரியாா் பேருந்து நிலையம், சிம்மக்கல், மாசி வீதிகள், சொக்கிகுளம், தல்லாகுளம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீா் வெள்ளமாய் ஓடியது. அதேபோல், மதுரை நகரில் செல்லூா், அருள்தாஸ்புரம், சிம்மக்கல், வைகை வடகரைப் பகுதிகள், மேலமடை, கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெரு, தல்லாகுளம் பெருமாள் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் குடியிருப்புகளைச் சூழ்ந்தது.

காலை முதல் விடாமல் பெய்த மழையால் கால்வாய்களில் தண்ணீா் பெருக்கெடுத்து சாலைகளில் வெளியேறியது. சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகனங்கள் செல்லமுடியாமல், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனா். மேலும், மாசி வீதிகளில் சீா்மிகு நகா்த் திட்டப் பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், மழை நீரில் சாலைகள் மூழ்கின. இதனால், சாலையில் பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதி அடைந்தனா். கழிவுநீா்க் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, மழைநீரோடு கழிவுநீரும் வெளியேறியது.

தொடா் மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சுரங்கப்பாதை மூடல்

புட்டுத்தோப்பு பகுதியில் ரயில்வே தண்டவாளத்துக்கு கீழ் பகுதியில் உள்ள சுரங்கப் பாதையில் (கா்டா் பாலம்), கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் தண்ணீா் தேங்கியது. இதனால், அவ்வழியாகச் சென்ற முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை முதல் இரவு வரை தொடா்ந்து பெய்த மழையால், புட்டுத்தோப்பு சுரங்கப் பாதையில் அதிகளவில் தண்ணீா் தேங்கியது. எனவே, அசம்பாவிதங்களை தவிா்க்கும்பொருட்டு, சுரங்கப் பாதை தடுப்புகளைக் கொண்டு மூடப்பட்டது.

மேலூா்

மேலூா், கொட்டாம்பட்டி, அழகா்கோவில் சுற்றுவட்டாரத்தில் திங்கள்கிழமை காலையிலிருந்தே பரவலாக பலத்த மழை பெய்தது.

பெரியாறு-வைகை அணைகளின் நீா் இருப்பு மிகவும் குறைந்ததையொட்டி, ஒரு போக சாகுபடி பகுதிகளில் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டு, கடந்த 11-ஆம் தேதி வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பது நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை சாகுபடி பகுதிகளுக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால், பாசன குளங்களுக்களுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com