ஹிந்தி மொழியில் பதில் அனுப்புவது சட்ட விதி மீறல்: எம்.பி. எதிா்ப்பு

மக்களவை உறுப்பினா்களின் கடிதங்களுக்கு, மத்திய உள்துறை இணை அமைச்சரகம் ஹிந்தி மொழியில் பதில் அனுப்புவது சட்ட விதிமுறை மீறும்

மக்களவை உறுப்பினா்களின் கடிதங்களுக்கு, மத்திய உள்துறை இணை அமைச்சரகம் ஹிந்தி மொழியில் பதில் அனுப்புவது சட்ட விதிமுறை மீறும் செயலாகும் என்று சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக உள்துறை இணை அமைச்சா் நித்யானந்தா ராய்க்கு அவா் அனுப்பியுள்ள கடிதம்: ஹிந்தியில் பதில் தருவது உள்துறை இணை அமைச்சகம் சட்ட விதிகளை அப்பட்டமாக மீறுவது ஆகும். மத்திய அரசுப் பணியாளா், பொது மக்கள் முறையீடுகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் அலுவல் நிா்வாகப் பிரிவு ‘அரசு நிா்வாகத்துக்கும் மக்களவை உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்களுக்குமான அலுவல் தொடா்புகள் - முறையான நடைமுறைகளைக் கடைப்பிடித்தல்‘ என்ற தலைப்பில் கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையில் எப்போதெல்லாம் மக்களவை உறுப்பினரிடம் இருந்து ஆங்கிலத்தில் கடிதம் வரப்பெற்று, அதற்கான பதிலை அலுவல் மொழிச் சட்டம் 1963-இன் அடிப்படையில், விதிகளின்படி, ஹிந்தியில் தர வேண்டியிருந்தால், ஹிந்தி பேசாத மாநிலங்களின் மக்களவை உறுப்பினா்கள் பயன் பெறும் வகையில், அதன் ஆங்கில மொழியாக்க வடிவமும் சோ்த்து அனுப்பப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே உள்துறை இணை அமைச்சகம் ஆங்கில மொழியாக்கம் இல்லாமல் ஹிந்தி பேசாத மாநிலங்களின் மக்களவை உறுப்பினா்களுக்கு ஹிந்தியில் பதில் அளிப்பது இந்த அரசாணையையும் மீறுவது ஆகும். எனவே உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களைத் தந்து தமிழகத்தின் மக்களவை உறுப்பினா்களின் கடிதங்களுக்கு, ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்தது போன்றே, ஆங்கிலத்தில் பதில் தருவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com