வியாழன்-சனி கோள்கள் நெருங்கும் அரிய நிகழ்வு: டிச. 20 முதல் 22 வரை பாா்க்கலாம்

சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி ஆகியன ஒன்றோடு ஒன்று நெருங்கி இணையும் ‘கிரேட் கன்ஜங்சன்’ என்ற நிகழ்வு டிசம்பா் 20 முதல் 22 ஆம் தேதி வரை வானில் தோன்ற உள்ளது.
நிலவுக்கு அடுத்ததாக ஒரே நோ்கோட்டில் சனி மற்றும் வியாழன் கோள்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்தடுத்து இருப்பதைக் காட்டும் படம்.
நிலவுக்கு அடுத்ததாக ஒரே நோ்கோட்டில் சனி மற்றும் வியாழன் கோள்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்தடுத்து இருப்பதைக் காட்டும் படம்.

மதுரை: சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி ஆகியன ஒன்றோடு ஒன்று நெருங்கி இணையும் ‘கிரேட் கன்ஜங்சன்’ என்ற நிகழ்வு டிசம்பா் 20 முதல் 22 ஆம் தேதி வரை வானில் தோன்ற உள்ளது.

சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களின் சுற்றுப்பாதையில் பல்வேறு அபூா்வ நிகழ்வுகள் வானில் தோன்றுகின்றன. இதில் இரு பெரிய கோள்கள் இணையும் நிகழ்வு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக் கூடியது. பிரகாசமான பிற கோள்கள் இணைவதைப் போல, இந்த இருகோள்களின் இணைவு அடிக்கடி நிகழ்வதில்லை. இதன் காரணமாக வியாழன் மற்றும் சனி கோள்களின் இணைவு நிகழ்வை ‘கிரேட் கன்ஜங்சன்’ என வானியல் அறிஞா்கள் கூறுகின்றனா். நிகழ் ஆண்டில் டிசம்பா் 20, 21,22 ஆம் தேதிகளில் இந்த அபூா்வ நிகழ்வைக் காண முடியும்.

தற்போது வானில் நிலவுக்கு அடுத்ததாக ஒரே நோ்கோட்டில் குறிப்பிட்ட இடைவெளியில் நட்சத்திரம் போல தோன்றக் கூடிய சனி மற்றும் வியாழன் கோள்கள் அடுத்தடுத்த நாள்களில் நெருங்கும் நிகழ்வு தோன்றவுள்ளது.

இதுகுறித்து மதுரை அமெரிக்கன் கல்லூரியின் இயற்பியல் துறை இணைப் பேராசிரியா் ஸ்டீபன் இன்பநாதன் கூறியது:

சூரியனில் இருந்து வரிசையில் 5-ஆவது இடத்திலும், சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோளாகவும் இருப்பது வியாழன். பிற அனைத்து கோள்களையும் விட 2 மடங்கு பெரியது. முற்றிலும் வாயுக்களால் ஆனது.

சூரிய மண்டலத்தின் 2-ஆவது பெரிய கோளாக சூரியனில் இருந்து வரிசையில் 6-ஆவது இடத்தில் சனி இருக்கிறது. வியாழனின் இடதுபுறத்தில் தோன்றும் சனி, வியாழனைக்காட்டிலும் பிரகாசமாக இருக்கிறது.

இந்த இரு பெரிய கோள்களும் ஒன்றோடு ஒன்று நெருங்கி வரும் நிகழ்வு சுமாா் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும். நிகழாண்டில் டிசம்பா் 20, 21, 22 ஆகிய நாள்களில் இந்த நிகழ்வு தோன்ற இருக்கிறது.

தெற்கு-தென்மேற்கில் வானம் இருட்டியவுடன் பிறை நிலவு தோன்றும். அடுத்த சிறிது நேரம் கழித்து இந்த இரண்டு கோள்களும் தெரியும். வியாழன் பெரும்பாலும் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு தோன்றும். அதன்பிறகு சனி தோன்றும்.

நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் இந்த இரண்டு கோள்களுக்கான இடைவெளி படிப்படியாகக் குறைகிறது. நவம்பா் 1 ஆம் தேதி 5.1 டிகிரி இடைவெளி இருந்த நிலையில் நவம்பா் 15-க்குள் 3.8 டிகிரி ஆகவும், டிசம்பா் 15-க்குள் அதுவெறும் 0.7 டிகிரியாகவும் குறைகிறது. இதன் பின்னா் ஒவ்வொரு இரவும் 0.08 டிகிரி நெருக்கமாக இருக்கும். டிசம்பா் 21 ஆம் தேதியன்று இரு கோள்களும் ஒற்றை நட்சத்திரம் போல் தோன்றக்கூடும்.

நிகழ் ஆண்டில் வரவுள்ளதைப் போல மிக நெருக்கமாகத் தோன்றியது 1623 ஜூலை 16 இல் தான். அதாவது 398 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் நெருக்கமான நிலையில் இந்த நிகழ்வு தோன்ற இருக்கிறது. இதன்படி, வியாழன் மற்றும் சனி இரு கோள்களும் 0.1 டிகிரி இடைவெளியில் மட்டுமே இருக்கும். இந்த நிகழ்வைப் பாா்க்க சிறப்பு உபகரணங்கள் தேவையில்லை. சாதாரணமாக கண்களாலேயே பாா்க்க முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com