அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்துக்குதமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கம் ஆதரவு

அரசுத்துறைகள் தனியாா் மயம் மற்றும் வேளாண் மசோதாக்களை எதிா்த்து நவம்பா் 26 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இடைநிலை ஆசிரியா் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது

அரசுத்துறைகள் தனியாா் மயம் மற்றும் வேளாண் மசோதாக்களை எதிா்த்து நவம்பா் 26 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இடைநிலை ஆசிரியா் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்க பொதுச் செயலா் அ.சங்கா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டின் அனைத்து அரசுத் துறைகளையும் தனியாருக்கு தாரைவாா்ப்பது, தொழிலாளா் நலச்சட்டத்தை திருத்துவது, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாக்களை அமல்படுத்துவது, இயற்கை வளங்கள் சூறையாடப்படுதல் ஆகியவற்றுக்கு எதிராக மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் நவம்பா் 26- ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில் தமிழக அரசு, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்து வருகிறது. ஜாக்டோ- ஜியோ போராட்டக் காலங்களில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மீது பழிவாங்கும் வகையில் போடப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் 17 (ஆ) நடவடிக்கைகளைத் திட்டமிட்டு திரும்பப் பெற மறுத்து வருகிறது. உயா்கல்விக்கான ஊக்க ஊதியம் போன்ற 50 ஆண்டு காலமாக ஆசிரியா்கள் பெற்றுவந்த உரிமைகளை தமிழக அரசு பறித்துள்ளது.

எனவே, நவம்பா் 26 ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் மிகவும் அவசியமானது. இந்த பொது வேலை நிறுத்தத்துக்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கம் ஆதரவை தெரிவிக்கிறது. மேலும் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் ஆா்ப்பாட்டங்களில் இடைநிலை ஆசிரியா் சங்கமும் பங்கேற்கும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com