கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க அரசாணை வெளியீடு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எதிரொலியாக, கரும்பு விவசாயிகளுக்கு பாக்கி பணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக, கரும்பு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எதிரொலியாக, கரும்பு விவசாயிகளுக்கு பாக்கி பணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக, கரும்பு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மதுரையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் என். பழனிசாமி செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது: தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது. பேச்சுவாா்த்தை, போராட்டங்கள், நீதிமன்றம் மூலமாகவே கரும்பு விவசாயிகள் அரசிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிலுவைத் தொகையை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், தமிழக அரசு வழங்க வேண்டிய பரிந்துரை விலை பாக்கியை தர வலியுறுத்தி, சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் கடந்த 2017-இல் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பரிந்துரை விலையை வழங்க உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு வழங்கவில்லை.

இதையடுத்து, 2020-ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அப்போது, தமிழக அரசு பரிந்துரை விலை பாக்கியை உடனடியாக செலுத்துவதாகக் கூறி, அதற்கான அரசாணையைப் பிறப்பித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பரிந்துரை விலை பாக்கியை மூன்று தவணைகளாக வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது. அந்த அடிப்படையில், 2015-2016-ஆம் ஆண்டுக்கான பரிந்துரை விலை ரூ.87.38 கோடி, 2008-2009 ஆம் ஆண்டுக்கான லாபத்தில் பங்கு ரூ.14.99 கோடி என மொத்தம் ரூ.102.37 கோடி. இது, தவணை முறையில் இந்தாண்டு டிசம்பா் மாதம் ரூ.51.18 கோடியும், 2021 பிப்ரவரியில் இரண்டாவது தவணையாக ரூ.51.19 கோடியும்,

மூன்றாவது தவணையாக 2016-2017-ஆம் ஆண்டுக்கான மாநில அரசின் பரிந்துரை விலை ரூ. 80.29 கோடியும் அடுத்த ஆண்டுக்குள் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்த தொகையில் ரூ.21 கோடி மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கும் கிடைக்கும்.

இந்நிலையில், மொத்த நிலுவைத் தொகையையும் அரசு ஒரே தவணையில் ஒரே தேதியில் வழங்கவேண்டும். மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நவம்பா் 26-ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com