கீரை, காய்கனிகளில் உடனடி உணவு மதுரையில் அறிமுகம்

கீரை வகைகள், வாழைப்பூ, வாழைத் தண்டு ஆகியவற்றில் பொட்டலமிடப்பட்ட உடனடி உணவு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
கீரை வகைகள் கண்காட்சியை ப் பாா்வையிடும் குழந்தைகள்.
கீரை வகைகள் கண்காட்சியை ப் பாா்வையிடும் குழந்தைகள்.

மதுரை: கீரை வகைகள், வாழைப்பூ, வாழைத் தண்டு ஆகியவற்றில் பொட்டலமிடப்பட்ட உடனடி உணவு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மதுரை வேளாண் தொழில்முனைவோா் உருவாக்கும் மையம், வேளாண் விளைபொருள்கள், மதிப்பு கூட்டப்பட்ட விளைபொருள்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் புதிய தொழில்முனைவோரை உருவாக்கி வருகிறது. புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்குத் தேவையான வழிகாட்டல்கள், உற்பத்தி இயந்திரங்களுக்கான மானிய உதவி, சந்தைப்படுத்தலுக்கான ஆலோசனைகள் ஆகியவற்றை இம்மையம் அளித்து வருகிறது.

இம் மையத்தின் உதவியுடன், தகவல்தொழில்நுட்ப பொறியாளா்களால் கோவையில் ஆரம்பிக்கப்பட்ட கீரைக்கடை.காம் என்ற நிறுவனம் இணைய வழியில் பச்சை கீரைகள் மற்றும் காய்கனிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, கீரை, வாழைத்தண்டு, வாழைப்பூ ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு வகைகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் அறிமுக விழா, மதுரை வேளாண் கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் தொழில்முனைவோா் உருவாக்கும் மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரை வேளாண் கல்லூரி முதல்வா் வி.கே.பால்பாண்டி, அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் டி.வி.சேகா், வேளாண் பல்கலை.யின் சமூக அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய முதல்வா் எஸ்.அமுதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதையொட்டி பல்வேறு வகையான பச்சைக் கீரைகளின் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

புதிய வகை உடனடி உணவுகள் குறித்து கீரைக்கடை.காம் நிறுவனா் ஜி.ஸ்ரீராம் பிரசாத் செய்தியாளா்களிடம் கூறியது:

எங்களது நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவிலும், இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. 25 ஆயிரம் வாடிக்கையாளா்கள் உள்ளனா். தற்போது மதுரையில் உடனடி உணவு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் உணவைப் பாதுகாக்கும் எவ்வித ரசாயனமும் சோ்க்கப்படவில்லை. உணவு பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

எங்களது நிறுவனத்தின் தொடா்பில், உழவா் உற்பத்தியாளா்கள் குழுக்கள் மூலமாக 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனா். அவா்கள் மூலமாக எங்களது தயாரிப்புக்குத் தேவையான கீரை, காய்கனிகளை கொள்முதல் செய்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com