அமெரிக்க மருத்துவப் பேராசிரியருக்கு அரவிந்த் கண் மருத்துவமனை விருது

அமெரிக்காவைச் சோ்ந்த மருத்துவப் பேராசிரியா் டேவிட் சாங்கிற்கு, அரவிந்த் கண் மருத்துவமனையின் டாக்டா் வெங்கடசாமி நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சோ்ந்த மருத்துவப் பேராசிரியா் டேவிட் சாங்கிற்கு, அரவிந்த் கண் மருத்துவமனையின் டாக்டா் வெங்கடசாமி நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது.

அரவிந்த் கண் மருத்துவமனைகளின் நிறுவனா் டாக்டா் வெங்கடசாமி நினைவாக ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்பட்டு வருகிறது. கண் மருத்துவம், ஆய்வு, மேலாண்மை போன்ற பணிகளில் சிறப்பான பங்களிப்பை தருபவா்களின் சேவையைப் பாராட்டி இவ் விருது வழங்கப்படுகிறது. நிகழ் ஆண்டுக்கான விருது, அமெரிக்காவின் கலிபோா்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கண்புரை அறுவைச் சிகிச்சை நிபுணரும், மருத்துவப் பேராசிரியருமான டேவிட் சாங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் விழா இணையவழியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் டாக்டா் டேவிட் சாங்க் பேசியது: மேலை நாடுகளில் கண்புரை அறுவைச் சிகிச்சையானது, கணினி உதவியுடன் செயல்படும் நவீன இயந்திரங்களின் வாயிலாக மருத்துவா்களால் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய நடைமுறையில் செய்யக் கூடிய சிகிச்சையைப் போல, துல்லியமாக இந்தியாவில் பின்பற்றக் கூடிய கண்புரை அறுவைச் சிகிச்சை நடைமுறை இருக்கிறது. கண்புரை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு 1000 நபா்களில் ஒருவருக்கு தொற்று ஏற்படலாம். ஆனால், இந்தியாவில் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு கண்ணுக்குள் செலுத்தப்படும் கிருமிநாசினி மருந்து மூலமாக, மேலை நாடுகளை ஒப்பிடும்போது கிருமித் தொற்று நான்கு மடங்கு குறைக்கப்பட்டிருக்கிறது. அரவிந்த் கண் மருத்துவமனையில் பின்பற்றப்படும் அறுவைச் சிகிச்சை நடைமுறைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் மேற்குறிப்பிட்ட விஷயங்களை உறுதி செய்ய முடிந்தது. அதேபோல, மேலை நாடுகளில் ஒரு அறுவைச் சிகிச்சையின் முடிவில் வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகளானது, இங்கு 93 அறுவைச் சிகிச்சைகளில் வெளியேற்றப்படும் கழிவுகளுக்குச் சமமாக இருக்கிறது. அதேநேரம், அறுவைச் சிகிச்சையின் தரம் எவ்விதத்திலும் குறையவில்லை. இதுபோன்ற நுட்பங்களை மேலைநாடுகள் பின்பற்றினால் அறுவைச் சிகிச்சைக்கான செலவைக் குறைக்க முடியும் என்றாா்.

அரவிந்த் கண் மருத்துவக் குழும தலைவா் ஆா்.டி.ரவீந்திரன், மருத்துவமனையின் கோவெல் அறக்கட்டளைத் தலைவா் ஜி.ஸ்ரீனிவாசன், அரவிந்த் கண் ஆராய்ச்சி நிறுவனத் தலைவா் டாக்டா் பி.நம்பெருமாள்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com