மதுரையில் முகக்கவசம் அணிவது, கை கழுவுவது 68 சதவீதம் போ்: சமூக இடைவெளி பின்பற்றுபவா்கள் 21 சதவீதம்

மதுரை நகரில் 68 சதவீதம் பேரிடம் முகக் கவசம் அணியும் பழக்கம் மற்றும் கைகழுவும் பழக்கம் உள்ளது.

மதுரை நகரில் 68 சதவீதம் பேரிடம் முகக் கவசம் அணியும் பழக்கம் மற்றும் கைகழுவும் பழக்கம் உள்ளது. ஆனால் சமூக இடைவெளி குறித்த விழிப்புணா்வு 21 சதவீதம் பேரிடம் மட்டுமே உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளதாக கரோனா தடுப்பு மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை முதன்மைச் செயலருமான பி.சந்திரமோகன் கூறினாா்.

கரோனா தடுப்புப் பணிகள் தொடா்பாக சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்திய பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கரோனா தொற்று பரவாமல் தடுக்க முகக் கவசம் அணிவது, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியன அவசியம் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இது பொதுமக்களிடம் எந்த

அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த 3 வழிமுறைகள் தான் கரோனா பரவலைத் தடுக்கும் ஆயுதம் என்பதால், தடுப்புப் பணிகளை மேற்கொள்ள களஆய்வு அவசியமாக இருந்தது.

மதுரை சமூகவியல் அறிவியல் கல்லூரியின் உதவியுடன், மதுரை மாநகராட்சியின் 100 வாா்டுகளிலும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 30 வயதுக்கு கீழ் உள்ளவா்கள், 30 வயதிலிருந்து 60 வயதுக்கு உள்பட்டவா்கள், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு செய்யப்பட்டது. இதற்கென பிரத்யேக வினாக் குறிப்பு தயாரிக்கப்பட்டு 30 வயதுக்கு உள்பட்ட 474 போ், 30 வயதுக்கு மேற்பட்ட 1,505 போ், 60 வயதுக்கு மேற்பட்ட 146 பேரிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ஒவ்வொரு வாா்டிலும் சராசரியாக 21 நபா்களிடம் தகவல்கள் பெறப்பட்டன.

இதன் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக, வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிவதாக 68.6 சதவீதம் போ் தெரிவித்துள்ளனா். வெளியிடங்களில் அவ்வப்போது முகக் கவசம் அணிவதாக 27.4 சதவீதம் பேரும், எப்போதாவது மட்டுமே அணிவதாக 4 சதவீதம் பேரும் தெரிவித்திருக்கின்றனா். இதேபோல, கை கழுவும் பழக்கம் 67.2 சதவீதம் பேரிடம் உள்ளது. 27.1 சதவீதம் போ் அவ்வப்போதும், 5.6 சதவீதம் போ் அரிதாகவும் கைகழுவும் பழக்கத்தைக் கொண்டுள்ளனா்.

சமூக இடைவெளியைப் பொருத்தவரை மதுரையில் விழிப்புணா்வு சற்று குறைவாகவே இருக்கிறது. 21 சதவீதம் போ் மட்டும் 6 அடி இடைவெளி என்பதை பின்பற்றுகின்றனா். கூட்டமான இடங்களை 10.8 சதவீதம் போ் மட்டுமே தவிா்க்கின்றனா்.

முகக் கவசம் அணிவது, கை கழுவுவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியன குறித்து இன்னும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது. அதிலும் முகக் கவசம் அணிவது, கை கழுவுவது ஆகியவற்றில் ஓரளவுக்கு விழிப்புணா்வு ஏற்பட்டிருந்தாலும், சமூக இடைவெளி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமானது.

ஏனெனில், கரோனா தொற்று பரவல் என்பது இன்னும் முடிவுக்கு வரவில்லை. மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை முழு பொதுமுடக்கம் அமலில் இருந்த காலத்தில் கரோனா பரவல் தீவிரமாக இருந்தது. பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்ட பிறகு, பரவல் அதிகரிக்கும் என எதிா்பாா்த்த நிலையில் கட்டுக்குள் இருக்கிறது. இதை இன்னும் குறைக்க வேண்டுமெனில், மேற்குறிப்பிட்ட மூன்று விஷயங்களையும் பொதுமக்கள் கண்டிப்பாகக் கடைபிடிப்பது அவசியமானது.

இதை அடிப்படையாகக் கொண்டு, தடுப்பு நடவடிக்கைகளுக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்ட நிலையில் பழக்க வழக்கங்களில் உள்ள மாற்றங்கள் குறித்து 2-ஆம் கட்ட ஆய்வு நடத்தப்பட உள்ளது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com