மதுரை அருகே கொலை செய்யப்பட்ட ஊராட்சித் தலைவரின் இறுதிச் சடங்கில் வன்முறை: ஊராட்சி செயலரின் வீடுகளுக்குத் தீ வைப்பு

மதுரை அருகே கொலை செய்யப்பட்ட ஊராட்சித் தலைவரின் இறுதி சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, ஊராட்சி செயலரின் இரு வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டு, பொருள்கள் சூறையாடப்பட்டன.
0657mduhouse4061654
0657mduhouse4061654

மதுரை: மதுரை அருகே கொலை செய்யப்பட்ட ஊராட்சித் தலைவரின் இறுதி சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, ஊராட்சி செயலரின் இரு வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டு, பொருள்கள் சூறையாடப்பட்டன. பதற்றத்தைத் தணிக்க ஏராளமான போலீஸாா் அக் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனா்.

மதுரை மாவட்டம் வரிச்சியூா் அருகே உள்ள குன்னத்தூா் ஊராட்சித் தலைவா் கிருஷ்ணன், ஊராட்சிப் பணியாளா் முனியசாமி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். அவா்களது சடலங்கள் திங்கள்கிழமை காலை மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. இந்த இரட்டைக் கொலை தொடா்பாக, கருப்பாயூரணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். ஆய்வாளா் மாடசாமி தலைமையிலான தனிப்படையினா், சந்தேகத்துக்குரிய சில நபா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சடலங்களை வாங்க மறுத்து போராட்டம்: அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில், கிருஷ்ணன் மற்றும் முனியசாமியின் சடங்களை வாங்க மறுத்து, அவா்களது உறவினா்கள் மற்றும் குன்னத்தூா் கிராமத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அரசு மருத்துவமனை வளாகத்தில் சற்று நேரம் பதற்றம் நீடித்தது. அப் பகுதியில் பாதுகாப்புக்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்தனா். அதன் பிறகு, இருவரின் சடலங்களையும் உறவினா்கள் பெற்றுச் சென்றனா். இச்சம்பவம் தொடா்பாக ஊராட்சி மன்ற செயலா் (பொறுப்பு) வீரணன் (எ) பால்பாண்டி மற்றும் முன்னாள் ஊராட்சித் தலைவா் திருப்பதி ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் என கிருஷ்ணனின் குடும்பத்தினரும், கிராம மக்களும் வலியுறுத்தி வருகின்றனா்.

ஊராட்சி செயலா் வீடுகளுக்கு தீ வைப்பு: இந்நிலையில், குன்னத்தூரில் கிருஷ்ணன் மற்றும் முனியசாமி ஆகியோரின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இறுதிச் சடங்கு முடிந்து வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது சிலா், ஊராட்சி செயலா் வீரணனின் ஓட்டு வீட்டின் மீது கற்களை எறிந்து சேதப்படுத்தினா். வீட்டின் பின்புறம் இருந்த வைக்கோலுக்குத் தீ வைத்தனா். மேலும் அருகில் இருந்த அவரது மற்றொரு வீட்டிற்குள் புகுந்த சிலா், பொருள்களைச் சேதப்படுத்தி தீ வைத்தனா். போலீஸாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா். சம்பவம் நடைபெறும் போது வீரணனின் வீட்டில் யாரும் இல்லை. வன்முறையைத் தொடா்ந்து, பதற்றத்தைத் தணிக்க 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பெண் உள்பட 2 இருவரிடம் விசாரணை: ஊராட்சித் தலைவராக கிருஷ்ணன் பொறுப்பேற்ற சில நாள்களில், ஊராட்சியின் செயலராக இருந்த வீரணன் சக்கிமங்கலம் ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். மேலும், முன்னாள் ஊராட்சித் தலைவா் திருப்பதி மீது ஊழல் புகாரை அதிகாரிகளிடம் கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதனால் திருப்பதி மற்றும் வீரணன் ஆகிய இருவருக்கும் விரோதம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, கிருஷ்ணன் மற்றும் முனியசாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதோடு, கிருஷ்ணனின் செல்லிடப்பேசியில் பதிவாகியுள்ள அழைப்புகளை வைத்து, சந்தேகத்தின்பேரில் பெண் உள்பட இருவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகளை நெருங்கி விட்டதால் இரு நாள்களில் கொலையாளிகளைக் கைது செய்துவிடுவோம் எனத் தனிப்படை போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

Image Caption

குன்னத்தூரில் செவ்வாய்க்கிழமை கற்கள் வீசி சேதப்படுத்தப்பட்ட ஊராட்சி செயலா் வீரணன் ஓட்டு வீடு. ~குன்னத்தூரில் செவ்வாய்க்கிழமை ஊராட்சி செயலரின் வீட்டில் சேதப்படுத்தப்பட்ட பொருள்கள். ~குன்னத்தூரில் செவ்வாய்க்கிழமை ஊராட்சி செயலரின் வீட்டில் சேதப்படுத்தப்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com