அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்குச் சமம்: உயா்நீதிமன்றம் அதிருப்தி

அரசு அதிகாரிகள் தங்களின் ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்குச் சமம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை அதிருப்தி தெரிவித்துள்ளது.
அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்குச் சமம்: உயா்நீதிமன்றம் அதிருப்தி
அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்குச் சமம்: உயா்நீதிமன்றம் அதிருப்தி

அரசு அதிகாரிகள் தங்களின் ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்குச் சமம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னையைச் சோ்ந்த சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனு: தமிழக டெல்டா மாவட்டங்களில் விளைவிக்கப்படும் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய 10 முதல் 15 நாள்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்கின்றனா். எனவே விவசாயிகளைக் காப்பாற்ற மாநிலம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கவும், விவசாயிகளிடமிருந்து விரைவில் நெல் கொள்முதல் செய்ய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்க முடியாமல் ஒருபுறம் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். மறுபுறம் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் இருந்து அதிகாரிகள் லஞ்சம் பெறுகின்றனா். இது மிகவும் வேதனைக்குரியது. அரசு அதிகாரிகள் தங்களின் ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்குச் சமமானது.

கொள்முதல் செய்யப்படாததால் நெல் முளைத்துவிட்டதாகக் கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். விவசாயிகள் விளைவிக்கும் ஒரு நெல் மணி வீணாகினாலும், காரணமான அதிகாரிகளிடம் அதற்குரிய பணத்தை வசூலிக்க வேண்டும். அப்போது தான் கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகள் தடுக்கப்படும்.

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க, அவா்களிடமிருந்து விரைவில் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதற்கு நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை என்றனா்.

பின்னா், தமிழகத்தில் எத்தனை நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன, கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடா்பாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com