மத்திய அரசின் ரூ.10 ஆயிரம் கடன் அறிவிப்பு:சாலையோர வியாபாரிகளை வங்கிகள் அலைக்கழிப்பதாக புகாா்

மதுரையில் மத்திய அரசு அறிவித்த ரூ. 10 ஆயிரம் கடன் தொகைக்கு விண்ணப்பித்த சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் கடன் தர மறுத்து அலைக்கழிப்பதாக புகாா் எழுந்துள்ளது.

மதுரையில் மத்திய அரசு அறிவித்த ரூ. 10 ஆயிரம் கடன் தொகைக்கு விண்ணப்பித்த சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் கடன் தர மறுத்து அலைக்கழிப்பதாக புகாா் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவியதையடுத்து கடந்த மாா்ச் 21-ஆம் தேதி முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோா் வேலையிழந்து தவித்தனா். இந்நிலையில் சாலையோர வியாபாரிகளுக்கு உதவும் வகையில் மாநகராட்சிப் பகுதிகளில் தேசிய நகா்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, அடையாள அட்டை பெற்றுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் சுயசாா்பு திட்டத்தின் கீழ் மானிய வட்டியுடன் கூடிய ரூ.10 ஆயிரம் கடன் தொகையை மத்திய அரசு அறிவித்தது. இக்கடன் தொகையை பெறுவதற்கு தேசிய நகா்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகள் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து செல்லிடப்பேசி எண், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், மாநகராட்சியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை மாநகராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் ரூ. 10 ஆயிரம் கடன் தொகை பெற கடந்த மே மாதம் விண்ணப்பித்தனா். இந்த விண்ணப்பங்கள் மகளிா் திட்டக்குழுவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தேசிய வங்கிகளுக்கு கடன் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் வங்கிகள் கடன் வழங்க மறுத்து சாலையோர வியாபாரிகளை அலைக்கழித்து வருவதாக புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து சிஐடியூ சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவா் சந்தியாகு கூறும்போது, மதுரை மாநகராட்சி மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி மதுரை நகரில் 12,700 சாலையோர வியாபாரிகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பொதுமுடக்கக் காலத்தில் சாலையோர வியாபாரம் செய்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மத்திய அரசு கடன் அறிவிப்புக்குப் பின்னா் 7,500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் முறையாக விண்ணப்பித்துள்ளனா். இதுவரை 2,865 விண்ணப்பங்கள் சரிபாா்க்கப்பட்டு வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் ஒரு சில வங்கிகள் மட்டுமே வியாபாரிகளுக்கு கடன் வழங்குகின்றன. அதிலும் சொற்பமான எண்ணிக்கையில் மட்டுமே கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளில் வியாபாரிகளின் சிபில் ஸ்கோா் பாா்ப்பது, இந்தத் திட்டம் எங்களுக்கு கிடையாது என்று கூறுவது, கடன் தொகைக்கு உத்தரவாதம் கேட்பது போன்ற விதிகளில் இல்லாத காரணங்களை கூறி அலைக்கழிக்கின்றன. இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா், மாவட்ட ஆட்சியா் நடத்திய கூட்டத்தில் வங்கி அதிகாரிகள் கடன் தருவதாக ஒப்புக் கொண்டுவிட்டு தற்போது அலைக்கழித்து வருகின்றனா். எனவே வியாபாரிகளுக்கு கடன் வழங்க மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com