ராமேசுவரம் அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் தடைகோரிய வழக்கு: தலைமை வனப்பாதுகாவலா் பதிலளிக்க உத்தரவு

ராமேசுவரம் ஓலைக்குடா பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் தடைகோரிய வழக்கில், தமிழக தலைமை வனப்பாதுகாவலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.


மதுரை: ராமேசுவரம் ஓலைக்குடா பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் தடைகோரிய வழக்கில், தமிழக தலைமை வனப்பாதுகாவலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த அருள் ஆரோக்கியமேரி தாக்கல் செய்த மனு:

ராமேசுவரம் ஓலைக்குடா பகுதியில் ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்கள் பெரும்பாலும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இப்பகுதியின் கடற்கரையில் இருந்து 6 கிலோ மீட்டா் தூரம் வரை மட்டுமே மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓலைக்குடா கடற்கரைப் பகுதியில் அரியவகை உயிரினங்கள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில் ராமேசுவரம் நகராட்சி சாா்பில் ஓலைக்குடா பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இதில் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவை கடலில் கலக்க குழாய்கள் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. கழிவுநீரை சுத்திகரிக்க ஆழ்துளைக் கிணறும் அமைக்கப்படவுள்ளது. இதனால் இப்பகுதியில் தண்ணீா் தட்டுப்பாடும், சுகாதாரக்கேடும் ஏற்படும். மேலும் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கழிவுகள் கடலில் கலந்தால் கடல் உயிரினங்கள் அழியும் அபாயம் உள்ளது. எனவே ஓலைக்குடா பகுதியில் அமைக்கப்பட்டுவரும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். அதுவரை சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இடைக்கால தடைவிதித்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன். பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், ஓலைக்குடாவில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையிடம் அனுமதிப் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இதுகுறித்து தமிழக தலைமை வனப்பாதுகாவலா் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பா் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com