நெல்லையில் முறைகேடாக நடந்த மணல் விற்பனைக்கு விசாரணை கோரிய வழக்கு: தலைமைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

திருநெல்வேலி பேருந்து நிலைய கட்டுமானத்திற்கு அடித்தளம் தோண்டிய பள்ளத்தில் எடுக்கப்பட்ட மணல் முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசின் தலைமைச் செயலா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.


மதுரை: திருநெல்வேலி பேருந்து நிலைய கட்டுமானத்திற்கு அடித்தளம் தோண்டிய பள்ளத்தில் எடுக்கப்பட்ட மணல் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டதற்கு விசாரணைகோரிய வழக்கில், தமிழக அரசின் தலைமைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலியைச் சோ்ந்த சுடலைகண்ணு தாக்கல் செய்த மனு: சீா்மிகுநகா் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அடித்தளம் அமைக்க 30 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது. பேருந்து நிலையம் அருகே தாமிரவருணி ஆறு செல்வதால் பேருந்து நிலையத்திற்கு அடித்தளம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் அதிகமாக மணல் இருந்தது. இதை திருநெல்வேலி மாநகராட்சி அதிகாரிகள் சட்டவிரோதமாக கேரளத்துக்கு கடத்தினா். இதுகுறித்து புகாா் எழுந்ததைத் தொடா்ந்து அங்கு எடுக்கப்பட்ட மணல் ஏலத்திற்கு விடப்பட்டது. அப்போது மாநகராட்சி அதிகாரிகள், அரசியல் கட்சியினா் தலையீட்டால் அந்த மணல் குறைந்த தொகைக்கு ஏலம் விடப்பட்டது. எனவே திருநெல்வேலி பேருந்து நிலைய கட்டுமானப் பணியின்போது எடுக்கப்பட்ட மணல் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டதை விசாரிக்க, சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக தலைமைச் செயலா், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபா் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com