கந்துவட்டி: வயதான தம்பதி பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி
By DIN | Published On : 07th September 2020 02:00 PM | Last Updated : 07th September 2020 02:00 PM | அ+அ அ- |

தற்கொலைக்கு முயன்ற தம்பதி.
கந்துவட்டி காரணமாக வயதான தம்பதி திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலத்தை அடுத்த வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா - அங்கம்மாள் தம்பதியினர் விவசாய தொழில் செய்து வருகின்றனர். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தங்குடி கிராமத்தைச் சார்ந்த பாண்டி என்பவரிடம் ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரமும், அதே பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவரிடம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் வட்டிக்கு வாங்கி, அதன் தொகையை 2019ஆம் ஆண்டு வட்டியுடன் அசல் தொகையும் செலுத்தி விட்டாராம்.
ஆனால் கருப்பையா கடன் வாங்கியவரிடம் எழுதிக்கொடுத்த புரோனோட் பத்திரத்தை திருப்பி தர கடன் கொடுத்தவர்கள் மறுத்துவிட்டனராம். மேலும் வட்டி தொகை தர வேண்டும் என மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கருப்பையா மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்நிலையில் கருப்பையா தனது மனைவி அங்கம்மாளுடன் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தனர். அங்கு அதிகாரிகள் இல்லாததையடுத்து, வாயில் முன்பு அமர்ந்து, தான் கையில் கொண்டு வந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து தனது மனைவிக்கும், தன் உடல்மீதும் தெளித்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றார்.
அப்போது அலுவலக வாயிலில் பணியில் இருந்த காவலர் உடனடியாக அவர்களை தடுத்து, திருமங்கலம் காவல் நிலையம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இது குறித்து திருமங்கலம் காவல்துறையினர் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.