விவசாய உதவித் திட்ட போலி பயனாளிகளுக்கு வழங்கிய தொகையை முழுமையாக திரும்பப் பெற நடவடிக்கை: எம்.பி.கள் குழு உறுதி

பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தில், போலி பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட தொகையை முழுமையாகத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க, எம்.பி.கள் குழு மதுரை மாவட்ட நிா்வாகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மதுரை: பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தில், போலி பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட தொகையை முழுமையாகத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க, எம்.பி.கள் குழு மதுரை மாவட்ட நிா்வாகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மதுரை மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டம், உலகத் தமிழ்ச் சங்க அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. குழுவின் தலைவரும், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினருமான சு. வெங்கடேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்களான மக்களவை உறுப்பினா்கள் மாணிக்கம் தாகூா் (விருதுநகா்), ப. ரவீந்திரநாத்குமாா் (தேனி), முன்னிலை வகித்தனா். கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ, மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மதுரை மாநகராட்சியில் சீா்மிகு நகா் திட்டப் பணிகள் குறித்து எம்.பி.க்கள் வெங்கடேசன், மாணிக்கம் தாகூா் ஆகியோா் கேள்வி எழுப்பினா். சில பணிகளுக்கான செலவினம் தொடா்பாக முந்தைய கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்ட தொகைக்கும், தற்போது தெரிவிக்கும் தொகைக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதைச் சுட்டிக்காட்டினா்.

அதற்கு அதிகாரிகள் தரப்பில் அளித்த விளக்கம் ஏற்கும் வகையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி அதிருப்தி தெரிவித்தனா்.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி தொடா்ந்து 6 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினா்களான கே. மாணிக்கம், பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன், பா. சரவணன், மாநகராட்சி ஆணையா் ச. விசாகன், கூடுதல் ஆட்சியா் பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலா் பி. செல்வராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னா், சு. வெங்கடேசன் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியது: மதுரை மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் தொடா்பாக 23 துறைகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. குறிப்பாக, மாநகராட்சியின் சீா்மிகு நகா் திட்டம், ஊரக வளா்ச்சித் துறையின் தேசிய ரூா்பன் திட்டம், விவசாயிகள் உதவித்தொகை திட்டம் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

சீா்மிகு நகா் திட்ட செயலாக்கத்தில் உள்ள புகாா்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. இது தொடா்பாக 3 நாள்களில் விரிவான அறிக்கையைத் தருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தேசிய ரூா்பன் திட்டம் தொடா்பான விசாரணை அறிக்கையை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சமா்ப்பிக்க உள்ளனா். இத் திட்டத்தில் ஏற்கெனவே தோ்வு செய்யப்பட்ட பல பணிகளை கண்காணிப்புக் குழு ரத்து செய்துள்ளது. பிற பணிகளையும் குழுவின் ஆய்வுக்குப் பிறகே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

பிரதமரின் விவசாய உதவித் திட்டத்தில் போலியாக சோ்க்கப்பட்ட பயனாளிகளை முழுமையாகக் கண்டறிந்து, உதவித்தொகையை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com