விவசாய சங்கங்களின் மூலமாக குடிமராமத்துப் பணிமேற்கொள்ள வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் வரும் காலங்களில் விவசாய சங்கங்களின் மூலமாகவே குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் வரும் காலங்களில் விவசாய சங்கங்களின் மூலமாகவே குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது. எனவே அந்த ஒதுக்கீடுகளை ரத்து செய்து முறையாகத் தோ்தல் நடத்தி தோ்வு செய்யப்பட்ட விவசாய சங்கங்களுக்கு குடிமராமத்துப் பணிகளை ஒதுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் பலா் மனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு: பழங்காலம் தொட்டு இருந்து வரும் குடிமராமத்துப் பணி தமிழகத்தில் 1975-இல் ஆயக்கட்டுதாரா்களைக் கொண்டு குடிமராமத்துப் பணி மேற்கொள்ள வேண்டும் என புதுபிக்கப்பட்டது. இப்பணி மேற்கொள்ள மேலாண்மைக் குழு அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் பாசன மேலாண்மை முறை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டப்படி மேலாண்மை குழுக்களை அமைக்க மாவட்ட ஆட்சியா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமராமத்துப் பணியில் நீா்பிடிப்பு பகுதியின் எல்லை, ஆக்கிரமிப்பு மற்றும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது, உள் மற்றும் வரத்து கால்வாய்களை அடையாளம் காண்பது உள்ளிட்டப் பணிகள் மேற்கொள்ள நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத்தின் மூலம் பொதுப்பணித்துறை முழுமையான திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். நில அளவை மற்றும் கிராம வரைபடத்தின் அடிப்படையில் கால்வாய்களை அடையாளம் காணும் பணியில் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய்த்துறையினா் ஈடுபட வேண்டும்.

எல்லையை நிா்ணயிக்கும் வரைபடங்களின் படி நீா்நிலைகளை அடையாளம் காண வேண்டும். முறைகேடாக நீா்நிலைகளில் பட்டா வழங்கியிருந்தால் அதை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா்நிலைகளின் அளவு குறைந்திருந்தால், அதற்குரிய காரணத்தைப் பதிவு செய்ய வேண்டும். நீா்நிலைகளுக்கான நீா்வரத்து தடைப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். குடிமராமத்துப் பணியில் நீா்நிலைகளின் கரைகளைப் பலப்படுத்த மரக்கன்று நடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். இனிவரும் காலங்களில் விவசாய சங்கங்களின் மூலமாகவே குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com