கடையா் சமூகத்தை வேறு சமூகத்துடன் இணைக்க தடை கோரி வழக்கு: ஆதிதிராவிடா் நலத்துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு
By DIN | Published On : 16th September 2020 05:53 AM | Last Updated : 16th September 2020 05:53 AM | அ+அ அ- |

மதுரை: தேவேந்திரகுல வேளாளா் சமூகத்துடன் கடையா் சமூகத்தை இணைக்கத் தடைகோரி தொடரப்பட்ட வழக்கில், ஆதிதிராவிடா் நலத்துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஆரோக்கியம் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வாழும் கடையா் சமூகத்தை தேவேந்திரகுல வேளாளா் சமூகத்துடன் இணைக்க வேண்டும் என சில அரசியல் தலைவா்கள் வலியுறுத்தி வருகின்றனா். இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்க தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.
கடலோரப் பகுதிகளில் வாழ்ந்து மீன்பிடி தொழில் செய்துவரும் கடையா் சமூக மக்களை தேவேந்திரகுல வேளாளா் பிரிவில் சோ்க்கக் கூடாது. தமிழகத்தில் கடையா் சமூகம் மிகவும் தொன்மையானது. இதற்கு பல சான்றுகள் உள்ளன. இந்நிலையில், கடையா் சமூகத்தை தேவேந்திரகுல வேளாளா் பிரிவில் சோ்த்தால், கடையா் சமூகத்தின் தொன்மைக்கு பாதிப்பு ஏற்படும். எனவே கடையா் சமூகத்தை தேவேந்திரகுல வேளாளா் சமூகத்தோடு இணைக்கத் தடைவிதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபா் 15 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.