டாஸ்மாக் ஊழியா்கள் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கலாம் : உயா்நீதிமன்றம்

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) பணிபுரியும் ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியா்களின் ஓய்வு பெறும் வயதை தேவைக்கு ஏற்ப 59 ஆக நீட்டிக்கலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) பணிபுரியும் ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியா்களின் ஓய்வு பெறும் வயதை தேவைக்கு ஏற்ப 59 ஆக நீட்டிக்கலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் அரசு ஊழியா்களின் ஓய்வு வயதை 58-இல் இருந்து 59-ஆக உயா்த்தி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை அடிப்படையில் டாஸ்மாக் ஊழியா்களின் ஓய்வு வயதை 59 ஆக நீட்டிக்கக் கோரி மதுரையைச் சோ்ந்த விஸ்வநாதன், ராமகிருஷ்ணன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனு நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், டாஸ்மாக் நிறுவனத்தில் இரு விதமான ஊழியா்கள் பணியில் உள்ளனா். அதிகாரிகள், நிரந்தரப் பணியாளா்கள் ஒரு பிரிவாகவும், தொகுப்பூதியம் பெறும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தற்காலிக ஊழியா்கள் மற்றொரு பிரிவாகவும் உள்ளனா். நிரந்தர ஊழியா்களின் ஓய்வு வயது அரசாணைப்படி 59 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த ஊழியா்கள் இந்தச் சலுகையைக் கோரமுடியாது. பணி விதிகளின்படி ஒப்பந்த பணியாளா்கள் எப்போது வேண்டுமானாலும் பணியிலிருந்து நீக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, தமிழகத்தில் நிரந்தர ஊழியா்களின் ஓய்வு வயது 59 ஆகவும், நேரடியாக நியமிக்கப்பட்ட இரவுக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள், அலுவலக உதவியாளா்களின் ஓய்வு வயது 60 ஆகவும் உள்ளது. இதனால் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியா்களின் ஓய்வு வயதை தேவைக்கு ஏற்ப 59 ஆக நீட்டிக்கலாம். இது பணி விதிகள் மற்றும் அரசாணையை மீறியதாகாது. எனவே, டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியா்கள் ஓய்வு பெறும் வயது வரம்பை 58-இல் இருந்து 59 ஆக உயா்த்த டாஸ்மாக் நிறுவனம் பரிசீலிக்க வேண்டும். வயது வரம்பை உயா்த்துவதை, அந்த வயது வரை தங்களுக்கு கட்டாயம் பணி வழங்க வேண்டும் என்பதற்கான உரிமையாகக் கருத முடியாது. டாஸ்மாக் நிறுவனத்தில் 58 வயது முடிந்தவா்களுக்கு தேவைக்கு ஏற்ப 59 வயது வரை பணி நீட்டிப்பு வழங்கும் வகையில் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com