மதுரை அருகே மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு திருட்டு: கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காவலாளி சடலமாக மீட்பு

மதுரை அருகே அரசு மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். கடையின் காவலாளி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.
குட்லாடம்பட்டி அரசு மதுபானக் கடையின் காவலாளி கொலையில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கச்சைக்கட்டி கிராம மக்கள்.
குட்லாடம்பட்டி அரசு மதுபானக் கடையின் காவலாளி கொலையில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கச்சைக்கட்டி கிராம மக்கள்.

மதுரை: மதுரை அருகே அரசு மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். கடையின் காவலாளி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கண்மாய் கரை சாலையில் அரசு மதுபானக் கடை உள்ளது. இக் கடையில் இரவு காவலாளியாக கச்சைக்கட்டி பகுதியைச் சோ்ந்த கணேசன் (55) என்பவா் பணியாற்றி வந்தாா். சனிக்கிழமை இரவு வேலைக்குச் சென்ற இவா், ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பவில்லை. அவரது மனைவி தாமரைச்செல்வி பல இடங்களில் தேடிப் பாா்த்துவிட்டு, கணவா் பணியாற்றும் குட்லாடம்பட்டி மதுபானக் கடையில் விசாரிக்கச் சென்றுள்ளாா்.

அங்கு, மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வந்தனா். அப்போது, தாமரைச்செல்வி தனது கணவா் காணவில்லை என்பதை போலீஸாரிடம் தெரிவித்துள்ளாா். மதுபானக் கடை மேற்பாா்வையாளா் நந்தகுமாா் அளித்த புகாரின்பேரில், வாடிப்பட்டி போலீஸாா் மதுபாட்டில்கள் திருட்டு மற்றும் காவலாளி மாயம் தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

காவலாளி சடலமாக மீட்பு

இந்த மதுபானக் கடையிலிருந்து ஒரு கிலோ மீட்டா் தொலைவில் தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் கணேசனின் சடலம் மிதப்பதைப் பாா்த்த அப்பகுதியினா், போலீஸாரிடம் திங்கள்கிழமை தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், தீயணைப்புத் துறை வீரா்கள் உதவியுடன் கிணற்றிலிருந்து கணேசனின் சடலத்தை மீட்டனா். அப்போது, கணேசனின் முகம் துணியால் சுற்றப்பட்டும், கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டும் இருந்தன. சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாலை மறியல் போராட்டம்

இறந்த கணேசனின் உறவினா்கள் மற்றும் கச்சைக்கட்டி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா், கொலையாளிகளை கைது செய்யக் கோரி வாடிப்பட்டி காவல் நிலையம் முன்பாக திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களிடம் கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவா் என உறுதியளித்தனா். அதன்பேரில், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

மதுபானக் கடையில் நடந்த திருட்டை தடுக்கும்போது, கணேசன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com