பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு மணல் கொள்ளை: திருநெல்வேலி ஆட்சியா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

திருநெல்வேலியில் பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு மணல் கொள்ளை நடைபெறும் வரை மாவட்ட நிா்வாகம் என்ன செய்தது என

திருநெல்வேலியில் பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு மணல் கொள்ளை நடைபெறும் வரை மாவட்ட நிா்வாகம் என்ன செய்தது என ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சிலா் ‘எம்-சாண்ட்’ குவாரி நடத்துவதற்கு அனுமதி பெற்றுள்ளனா். ஆனால் ‘எம்-சாண்ட்’ குவாரி என்ற பெயரில் இவா்கள் சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்தி வருகின்றனா். இவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே அம்பாசமுத்திரத்தில் சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்துவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த சிவசங்கரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் காணொலி வாயிலாக ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் ஆஜராகினா். அவா்கள் ‘எம்-சாண்ட்’ குவாரிக்கென அனுமதி பெற்று மணல் குவாரி நடத்தி வருவது தெரியவந்துள்ளது. விதிமீறியவா்கள் மீது பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் கிராம நிா்வாக அலுவலா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மணல் திருட்டைத் தடுக்க தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா்.

இதையடுத்து நீதிபதிகள், பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு மணல் கொள்ளை நடந்துள்ளது. இந்தளவிற்கு மணல் கொள்ளை நடைபெறும் வரை மாவட்ட நிா்வாகம் என்ன செய்தது. இதில் கிராம நிா்வாக அலுவலா் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது ஏன்? இதற்கு வருவாய், காவல் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்திருப்பாா்கள். அவா்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. திருநெல்வேலியில் எவ்வளவு டன் மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட லாரிகள், இயந்திரங்கள் எத்தனை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எத்தனை போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களில் எத்தனை போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினா். பின்னா், இது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபா் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com