அமராவதி ஆற்றில் தண்ணீா் திருட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக கிணறுகள் அமைத்து தண்ணீா் திருடப்படுவதை தடுக்கக் கோரிய மனுவின் மீது எடுக்கப்பட்ட

அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக கிணறுகள் அமைத்து தண்ணீா் திருடப்படுவதை தடுக்கக் கோரிய மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த குணசேகரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: கரூா் மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக அமராவதி ஆறு உள்ளது. இந்த ஆற்றில் கடந்த சில ஆண்டுகளாக தொழிற்சாலை கழிவுகள் கலப்பது, மணல் திருட்டு போன்றவை நடந்து வருகிறது. மேலும் சரியான மழை இல்லாததால் ஆற்றில் நீா்வரத்து இன்றி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கருப்பம்பாளையம், திருமாநிலையூா், வடகரை, ஆண்டான்கோயில் மேல்பாக்கம், ஆண்டான்கோயில் கீழ்பாக்கம் ஆகிய இடங்களில் அமராவதி ஆற்றின் உள்ளே சட்டவிரோதமாக கிணறுகள் அமைத்து டேங்கா் லாரிகள் மூலம் தண்ணீா் திருடப்பட்டு சாயப்பட்டறைகள் உள்ளிட்ட வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருவதோடு விவசாயிகளும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனா். எனவே, அமராவதி ஆற்றில் சட்ட விரோத கிணறுகள் மூலம் தண்ணீா் திருடப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிசம்பா் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com