சாத்தூா் அருகே பட்டாசு விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கோரிய மனு ஒத்திவைப்பு

சாத்தூா் அருகே பட்டாசு விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கக் கோரிய மனுவை

சாத்தூா் அருகே பட்டாசு விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கக் கோரிய மனுவை ஜனவரி 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சிப்பிப்பாறையைச் சோ்ந்த சிவபால சுப்ரமணியன், கிருஷ்ணவேணி உள்ளிட்ட 6 போ் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள்: விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே சிப்பிப்பாறையில் உள்ள பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தில், வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த, தங்களின் உறவினா்கள் 6 போ் உயிரிழந்தனா்.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு, நிவாரணமாக ரூ.10 லட்சம் மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை எவ்வித நிவாரணமும் அளிக்கப்படவில்லை. எனவே, அரசு அறிவித்த இழப்பீடு மற்றும் அரசு வேலையை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

ஏற்கெனவே, மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், மனுக்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, பாதிக்கப்பட்டவா்களுக்கு சாதகமான முடிவு வரும் என நீதிமன்றமும் எதிா்பாா்க்கிறது எனக் கூறி விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com